
முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான பாத்தேக் ஏர் கோலாலம்பூரிலிருந்து கொழும்பு நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது.
நேற்று மார்ச் 30 ஆம் பாத்தேக் ஏர் OD298 விமானம் 120 பயணிகளுடன் பண்டாரநாயகே அனைத்துலக விமான நிலையத்திலிருந்து 8.25 மணிக்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை(கேஎல்ஐஏ) வந்தடைந்தது.
கொழும்புவிலிருந்து உற்சாகத்துடன் வந்திறங்கிய அனைத்து பயணிகளையும் மலேசிய சுற்றுலாத்துறை அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் வந்தடைந்த பயணிகளுக்கு அன்பளிப்பு கைகள் கொடுத்து மலேசிய சுற்றுலாத்துறை துணை இயக்குனர் லீ தை ஹூக், அனைத்துலக பிரிவின் இயக்குனர் நுவால் பாட்ஸிலா,பாத்தேக் ஏர் தொடர்பு மற்றும் ஊக்குவிப்பு பிரிவின் தலைவர் சுரேஷ் வாணன், இந்நிறுவனத்தின் பொது உறவு மற்றும் தொடர்பு பிரிவின் நிர்வாகி ஹன்னா ஹூசேன் மற்றும் மலேசியா ஏர்போர்ட் நிறுவனத்தின் அதிகாரிகள் அன்புடன் வரவேற்றனர்.

2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரம் தொடங்கி விட்டதா, இந்த நேரடி சேவை மிகவும் வரவேற்கத்தக்கது என மலேசிய சுற்றுலாத் துறையின் தலைமை இயக்குனர் முகமட் அமிருல் ரிஸால் தமது உரையில் கூறினார்.
மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த புதிய நேரடி விமான சேவை மிகவும் அவசியம் என்றார் அவர்.
தற்போது கோலாலம்பூர் மற்றும் கொழும்புவிற்கு இடையே வாரத்திற்கு 38 விமான போக்குவரத்து சேவைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2025 ஆம் ஆண்டில் கொழும்புவிலிந்து 77,020 பயணிகள் மலேசியாவிற்கு வருகை புரிந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இந்த எண்ணிக்கை கடந்த 2024 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 24.7 விழுக்காடு அதிகம் என அவர் தெரிவித்தார்.
தற்போது கோலாலம்பூர் மற்றும் கொழும்புவிற்கு இடையே மலேசியா ஏர்லைன்ஸ், ஏர் ஆசியா, ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் மற்றும் பிட்ஸ் ஏர் ஆகிய விமான நிறுவனங்கள் சேவையை மேற்கொண்டு வருகின்றன. இதனிடையே இந்த நேரடி விமான சேவையின் மூலம் இப்பிராந்தியத்தின் விமான போக்குவரத்து எளிதாக்கப்படும் என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
2926 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டிற்கான பிரச்சாரம் தொடங்கி விட்டதால் இந்த நேரடி விமான சேவை மலேசியா சுற்றுலாத்துறைக்கு துணை புரியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் மலேசியா மற்றும் ஸ்ரீ லங்கா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை மேலும் வலுபெறும் என்றார் அவர்.
ஆசியா நாடுகளுக்கு இடையே பாத்தேக் ஏர் தனது விமான போக்குவரத்து சேவையை தொடர்ந்து அதிகரித்து வரும் என அவர் சொன்னார்.


