
ஜொகூர் மாநிலத்தில் உள்ள இந்து கோயில்கள் உவகாரத்தில் தேசிய நல்லிணக்கம், மொழி மற்றும் மத உணர்வுக்கு மதிப்பளிக்குமாறு அனைத்து தரப்பினரையும் ஜொகூர் மலேசிய இந்திய கட்சியின் தலைவர் டாக்டர் எஸ்.சஸ்வின் கேட்டுக் கொண்டார்.
இந்த விவகாரத்தில் ‘கோயில் ஹராம்’ என்ற சொல்லை பயன்படுத்துவது தவிர்க்குமாறு அரசாங்க அதிகாரிகள், ஊடகங்கள் மற்றும் பொதுமக்களை அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த சொல் மரியாதை குறைவான ஒன்று மட்டுமின்றி இந்திய சமூகத்தின் மனதை மிகவும் புண்படுத்துவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வழிபாட்டு தலங்களை இப்படி தரம் குறைவான சொற்களை கொண்டு சித்தரிக்கக் கூடாது என அவர் தெளிவுபடுத்தினார்.
சட்ட நடைமுறை மற்றும் நில விதிமுறைகளுக்கு கட்டுப்படும் அதே வேளையில், இது போன்ற விவகாரங்களை புத்தி கூர்மை மற்றும் இரக்க உணர்வோடு கையாள வேண்டும் என அவர் நினைவுறுத்தினார்.
அதிகமான கோயில்கள் நூற்றாண்டு காலமாக செயல்பட்டு வருகிறது.
இவை இந்திய சமூகத்தில் வரலாறு மற்றும் ஆன்மீக வாழ்க்கையை ஒன்றிணைந்து இயங்கி வருகிறது.
ஆகையால் இந்த விவகாரத்தில் சமூக உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றார் அவர்.
அனைத்து சமூகங்களின் இன மற்றும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது, தூண்டும் வகையிலான செயல்களில் ஈடுபடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
சமய விவகாரத்தை இன சர்ச்சையாக மாற்றக்கூடாது.
அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் புரிந்துணர்வை வலுப்படுத்த வேண்டும்.
மலேசியா பல இனங்கள் பல மதங்களை கொண்டு துரித வளர்ச்சி அடைந்த ஒரு நாடாகும்.
ஆகையால் வெறுப்புத் தனமான பேச்சு, இன தூண்டுதல் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் என அவர் நினைவூட்டினார்.
கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மற்றும் கலந்துரையாடலின் வழி தீர்வு காண வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் வழிபாட்டு தலங்களைப் பற்றி குறிப்பிடும் போது மரியாதை மிக்க மற்றும் முறையான சொற்களை பயன்படுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற விவகாரங்களில் அரசாங்க அதிகாரிகள் சமய அமைப்புக்கள் மற்றும் சமூகத் தலைவர்களுடன் முறையான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
நாடு அமைதியுடன் மற்றும் நல்லிணக்கத்துடன் இருப்பதை அனைவரும் உறுதி கொள்ள வேண்டும் என்றார் அவர்.
மலேசியர்களின் உணர்வுகளை பிரதிபலிக்க அனைத்து தரப்பினருடன் ஒத்துழைக்க மலேசிய இந்திய மக்கள் கட்சி தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.


