
பத்து மலை தைப்பூச கடைகள் அதிக விலையில் ஏலத்தில் விடுவதால் சிறு தொழில் வியாபாரிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாக மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கம் சாடியது.
ஆண்டுதோறும் குழுக்கள் முறையில் இந்த கடைகளை வழங்குவது தான் வழக்கமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் இவ்வாண்டு தைப்பூச கடைகள் ஏல முறையில் விடப்படும் என செலாயாங் நகரான்மை கழகத்தின் இந்த முடிவு மிகவும் கண்டிக்கத்தக்கது என மலேசிய பயனீட்டாளர் நீதி இயக்கத்தின் தலைவர் டாக்டர் எஸ்பி பிரேம் கூறினார்.
தைப்பூசம் கொண்டாட்ட காலத்தின் போது அங்கு சாலை ஓரத்தில் வியாபாரம் செய்ய குலுக்கல் முறையில் 200 முதல் 600 வெள்ளி மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இம்முறை இந்த கடைகள் ஏலத்தில் விடுப்பட்டு பல ஆயிரம் வெள்ளி கொடுத்து சிறு தொழில் வியாபாரிகள் இந்த கடைகளை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது மிகவும் பரிதாபமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
3 அல்லது 4 நாட்களுக்கு மட்டுமே வியாபாரம் செய்ய சிறு தொழில் வியாபாரிகள் ஏலத்தில் பல ஆயிரம் வெள்ளி கொடுத்து எப்படி வாங்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
எதிர் வரும் நோன்பு மாத காலத்திற்கு கோலாலம்பூரில் உள்ள சிறு தொழில் வியாபாரிகள் ஒரு மாதத்திற்கு வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் 400 ஒரு வெள்ளி மட்டுமே வசூலிக்கிறது.
இந்த நிலையில் தைப்பூச காலத்தில் 3 அல்லது 4 நாட்களுக்கு வியாபாரம் செய்ய பல ஆயிரம் வெள்ளியை வசூலிப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கிறது என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரத்தில் சிலாங்கூர் அரசாங்கம் உடனடியாக தலையிட்டு ஒரு நிரந்தர தீர்வை காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்திய சிறு தொழில் வியாபாரிகளின் நலன்களை கருத்தில் கொண்டு சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் பாப்பராய்டு உடனடியாக தலையிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆண்டிற்கு ஒரு முறை தான் இந்திய சிறு தொழில் வியாபாரிகள் இங்கு வியாபாரம் செய்ய வாய்ப்பு கிடைக்கிறது.
ஆகையால் சிலாங்கூர் அரசாங்கம் இந்த விவகாரத்தில் அலட்சியப் போக்கை கடைபிடிக்க கூடாது என அவர் நினைவுறுத்தினார்.


