
இந்திய மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதும், தமிழ்ப்பள்ளிகளின் கற்றல் சூழலை நவீனமயமாக்குவதும் அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருப்பதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவு (மித்ரா) மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்களின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, நெகிரி செம்பிலான் மாநிலம் சிரம்பான் மாவட்டத்திலுள்ள செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும், சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கும் அவர் இன்று பணிப்பயணம் மேற்கொண்டார்.
இந்த இரண்டு தமிழ்ப்பள்ளிகளுக்கும் மித்ரா மூலம் மொத்தம் 345,900 ரிங்கிட் ஒதுக்கப்பட்டு மடானி தளவாடப் பொருளுதவி, கல்வி மடானி (இலவச கூடுதல் நேர வகுப்பு) மற்றும் ஸ்மார்ட் போர்ட் (விவேகப் பலகை) திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முதலில் செனாவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்ற டத்தோஸ்ரீ ரமணன், அங்கு செயல்படுத்தப்பட்டுள்ள கல்வித் திட்டங்களை நேரில் பார்வையிட்டதுடன், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்-ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இந்தப் பள்ளிக்கு 202,360 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மடானி தளவாடப் பொருளுதவி திட்டத்திற்கு 145,600 ரிங்கிட், கல்வி மடானி திட்டத்திற்கு 44,260 ரிங்கிட் மற்றும் ஸ்மார்ட் போர்டு திட்டத்திற்கு 12,500 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. கல்வி மடானி திட்டத்தின் மூலம் 60 மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய டத்தோஸ்ரீ ரமணன், மித்ரா-வின் கல்வித் திட்டங்கள் பள்ளிகளில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டார்.
அவர் கூறுகையில், ஸ்மார்ட் போர்டு திட்டம் ஆசிரியர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது என்றார்.
“ஸ்மார் போர்டு திட்டம் குறித்து ஆசிரியர்களிடமிருந்து மிகவும் நேர்மறையான கருத்துகளைப் பெற்றுள்ளோம். இந்த வசதியின் மூலம் மாணவர்களுடன் கற்பித்தல் இன்னும் சுறுசுறுப்பாகவும், எளிமையாகவும், பயனுள்ளதாகவும் மாறியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது மித்ராவின் வெற்றிகரமான கல்வி முயற்சிகளில் ஒன்றாக அமைந்துள்ளது,” என்றார்.
அதேவேளை, கல்வி மடானி – இலவச கூடுதல் நேர வகுப்புகள் நல்ல முறையில் நடைபெற்று வந்தாலும், மாணவர்களின் போக்குவரத்து வசதி தொடர்பாக சில சவால்கள் இருப்பதாக ஆசிரியர்கள் சுட்டிக்காட்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“பள்ளி நேரத்திற்குப் பிறகு வகுப்புகள் நடைபெறுவதால், சில மாணவர்கள் போக்குவரத்து சிரமத்தை எதிர்கொள்கின்றனர். இந்தக் குறையை நாங்கள் கவனத்தில் எடுத்துள்ளோம். அதற்கு விரைவில் தீர்வு காணப்படும். அதேசமயம், சிறப்பு அதிகாரிகள் பள்ளிகளுக்குச் சென்று போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்,” என்று அவர் கூறினார்.
கல்வித் திட்டங்களை வெறும் நிதி ஒதுக்கீடாக மட்டும் அரசு கருதவில்லை என்றும், அவற்றின் செயல்திறனே முக்கியம் என்பதால், பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆசிரியர்களின் கருத்துகளைக் கேட்டு தேவையான மேம்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து டத்தோஸ்ரீ ரமணன் சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கு சென்று, மடானி தளவாடப் பொருளுதவி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள புதிய தளவாடப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்களை நேரில் ஆய்வு செய்தார். பின்னர் ஆசிரியர்களைச் சந்தித்து, திட்டங்களின் செயல்பாடு, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடினார்.
இந்தப் பள்ளிக்கு 143,540 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மடானி தளவாடப் பொருளுதவி திட்டத்திற்கு 86,780 ரிங்கிட், கல்வி மடானி திட்டத்திற்கு 44,260 ரிங்கிட் மற்றும் ஸ்மார்ட் போர்டு திட்டத்திற்கு 12,500 ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளது. இப்பள்ளியிலும் 60 மாணவர்கள் கல்வி மடானி திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
கல்வி என்பது இந்திய சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றும் மிகப்பெரிய முதலீடு என்பதால், மித்ரா மூலம் செயல்படுத்தப்படும் ஒவ்வொரு கல்வித் திட்டமும் மாணவர்களின் கல்வித் தரத்தையும் பள்ளிகளின் கற்றல் சூழலையும் மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
அரசின் ஒத்துழைப்புடன் இந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் புதிய முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், பள்ளிகளில் இருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் திட்டங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இந்த ஆய்வுப் பயணத்தில் மித்ரா தலைமை இயக்குநர் கே. ரவீந்திரன், கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ-வின் சிறப்பு அதிகாரி இளங்கோ, இரு தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கத் தலைவர்கள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்


