
இங்குள்ள தாமான் துவாங்கு நஜிஹா ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் வருடாந்திர பொங்கல் விழா கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நமது இந்துக்களின் பாரம்பரியத்தை நிலை நாட்டும் வகையில் வட்டாரத்தில் உள்ள மக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் ஒற்றுமை உணர்வை இந்த கொண்டாட்டத்தில் வெளிப்படுத்தினர்.
இந்த கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பு சிறப்பு பிரமுகராக கலந்து கொண்ட சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரனுக்கு ஆலய நிர்வாகம் சிறப்பு செய்தது.
நாளை செவ்வாய்க்கிழமை நெகிரி செம்பிலான் ஆட்சியாளரிடமிருந்து குணசேகரன் ‘டத்தோ’ விருது பெறவிருப்பதால் முன்கூட்டியே ஆலய நிர்வாகம் இவரை கௌரவித்தது.

பல கலாச்சார நிகழ்ச்சிகளுடன் இந்த பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.
நமது பாரம்பரிய விழாவான பொங்கல், இந்துக்களுக்கு ஒரு சிறப்பான நாள் என குணா தமது உரையில் கூறினார்.
‘தை பிறந்தாள் வழி பிறக்கும்’ என்பதால் இந்த பொங்கல் கொண்டாட்டம் நமக்கு பிரகாச எதிர்காலத்தை தரும் என நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.

உழவர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கீகாரம் நாள் இது. அதே போல் நாம் அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த பொங்கல் விழாவை வெற்றிகரமாக வழி நடத்திய இந்த ஆலயத்தின் தலைவர் தனபாலன், செயலாளர் ராஜ சூர்யா மற்றும் ஆலய நிர்வாக குழுவினர் அனைவருக்கும் அவர் நன்றி கூறினார்.
இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.


