
மலேசியாவின் ஊடக சுதந்திரத்தை மடானி அரசாங்கமே முன்னெடுத்ததாக அலை ஓசை ஊடகத்தின் தலைமை ஆசிரியர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் கூறினார்.
இதற்கு சான்று அண்மையில் மடானி அரசாங்கம் ஊடக மன்றத்தை நிறுவ வழங்கிய அங்கீகாரம் என அவர் சுட்டி காட்டினார்.
நேற்று முன்தினம் தென் கொரியாவின் தலைநகரான சியோலில் நடைபெற்ற HWPL இயக்கத்தின் 11 ஆவது உலக அமைதி உச்ச நிலை மாநாட்டில் அந்த இயக்கத்தின் உலகளாவிய 07 கிளையின் தலைமை இயக்குனர் சியோங்-ஜூ லீயுடன் நடைபெற்ற ஒரு பிரத்தியோக சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம் ஊடக சுதந்திரத்திற்கு முன்னுரிமை வழங்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஊடக மன்றம் என்பது ஊடகவியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு அங்கீகாரம் என்று தான் கூற வேண்டும் என்றார் அவர்.

இந்த நிலையில் உலக அமைதிக்காக HWPL இயக்கம் முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவு வழங்கப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
HWPL இயக்கத்தின் உலக அமைதி மற்றும் நல்லிணக்கத்திற்காக முன்னெடுத்து வரும் முயற்சிகளுக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி முழுமையான ஆதரவை வழங்கி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
புரிந்து கொள்வது மற்றும் நல்லிணக்கம் தான் தேசிய ஒற்றுமைக்கு அடித்தளம் என்பதை அவ்வப்போது அவர் சுட்டிக் காட்டி வருவதாக அவர் சொன்னார்.
இதனிடையே உலக அமைதி மற்றும் சமாதானத்திற்கு உலகளாவிய அனைத்து தரப்பினரின் பங்கு மற்றும் ஒத்துழைப்பு மிக அவசியம் என இந்த சந்திப்பில் சியோங்-ஜூ தெரிவித்தார்.
உலக அமைதிக்காக HWPL முன்னெடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஊடகம் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு ஊடக சுதந்திரமே அடித்தளம் என்றார் அவர்.
உலக அமைதி மற்றும் சமாதானத்திற்காக HWPL முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை மக்கள் மனதில் பதிக்க ஊடகமே முக்கிய பங்காற்ற வேண்டும் என்றார் அவர்.
கடந்த 5 ஆண்டுகளாக தென் கொரியாவில் நடந்து வரும் HWPL இயக்கத்தின் நடவடிக்கைகளை மக்கள் மனதில் கொண்டு செல்ல ஊடகவியலாளர் நவநீத கிருஷ்ணன் ரத்தினம் பெரும் பங்காற்றி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


