
கோத்தா கினபாலுவிலிந்து தென் கொரியா தலைநகரான சியோலுக்கு பாத்தேக் ஏர் நேரடி விமான சேவையை தொடங்கியது.
நேற்று செப் 12 கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்திலிருந்து சியோல் நகரின் இஞ்சியோன் அனைத்துலக விமான நிலையத்திற்கு பாத்தேக் ஏரின் முதல் விமானம் புறப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் சபா சுற்றுலாத்துறை துணை தலைமை செயல்முறை அதிகாரி தை சு லான், மலேசியா சுற்றுலாத்துறை துணை தலைமை இயக்குனர் லீ தை ஹூங், மலேசியா சபா சுற்றுலாத்துறை இயக்குனர் ஹரியான்தி அபு பாக்கார் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சபா பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் இசை மற்றும் நடனங்களுடன் நடைபெற்ற இந்த கொண்டாட்டத்தில் பயணிகளுக்கு மலேசியா சுற்றுலாத்துறை அன்பளிப்பு பைகளை வழங்கியது.

வாரத்திற்கு 3 மூன்று முறை சியோல் நகருக்கு பாத்தேக் ஏர் விமான சேவையை மேற்கொள்கிறது.
தென் கொரியாவிலிருந்து தேவை அதிகரிப்பை தொடர்ந்து பாத்தேக் ஏர் இந்த புதிய விமான சேவையை தொடங்கியது.
இவ்வாண்டில் கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை தென் கொரியாவிலிருந்து 103,060 சுற்றுப்பயணிகள் சபாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
கடந்த 2024 ஆண்டில் 192,509 தென் கொரியா சுற்று பயணிகள் சபாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
பயணிகள் தங்களின் விடுமுறையை எளிதாக திட்டமிட இந்த புதிய விமான சேவை துணை புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இந்த புதிய வழித்தடம் இரு நகரங்களுக்கும் நன்மையை தரும் என எதிர்பார்க்கப்படுவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
கோத்தா கினபாலுவிற்கு தென் கொரியா ஒரு முக்கிய விற்பனை சந்தை என்பதால், இந்த புதிய விமான சேவை நல்ல வரவேற்பை தரும் என அவர் சொன்னார்.
கோத்தா கினபாலுவிலிந்து ஆசியாவில் முக்கிய நகர்களுக்கு பாத்தேக் ஏர் விமான சேவைகளை மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் இந்த புதிய விமான சேவையினால் கலாச்சார பரிமாற்றம், சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு அதிகரிக்கும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
இந்த புதிய விமான சேவை கோத்தா கினபாலு மற்றும் கிழக்கு மலேசியாவிற்கு அதிகமான சுற்றுப்பயணிகளை கவரும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டு பிரச்சாரத்தை முன்னிட்டு அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் வருகை புரிவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் சொன்னார்.
இதனிடையே சியோல் நகருக்கான பாத்தேக் ஏரின் நேரடி விமான சேவை நல்ல வரவேற்பை தரும் என தாம் நம்புவதாக சபா சுற்றுலா, கலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ கிரிஸ்டினா லீவ் கூறினார்.
சபாவில் பாத்தேக் ஏர் கொண்டுள்ள நம்பிக்கையை தாம் பாராட்டுவதாக அவர் தெரிவித்தார்.
சபாவின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு இந்த புதிய நேரடி விமான சேவை புத்துணர்ச்சியை தரும் என தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
தென் கொரிய சுற்றுப்பயணிகளுக்கு சபா ஒரு சிறந்த தேர்வு என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.
கோத்தா கினபாலு இயற்கை அழகு மற்றும் கலாச்சார வளத்தை கொண்டுள்ள ஒரு அற்புதமான நகரம் என்பதால் தென் கொரிய சுற்றுப்பயணிகள் சபா மாநிலத்திற்கு வருகை புரிய விரும்புவதாக அவர் தெரிவித்தார்.


