Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கூச்சிங்-போண்டியானக் நகரங்களுக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது!

கூச்சிங் மற்றும் கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியாவின் போண்டியானக் நகரத்திற்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்கியது.
இந்த புதிய வழித் தடங்களின் மூலம் இந்தோனேசியாவின் மேற்கு காளிமன்தானில் ஏர் ஆசியா வலிமையாக கால் பதித்து உள்ளது.
நேற்று போண்டியானக்கிலிந்து கூச்சிங் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த AK 1782 விமான பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.
அனைத்து பயணிகளையும் சரவாக் சுற்றுலாத்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்னோடான் லாவான், மலேசிய சுற்றுலாத்துறை துணை இயக்குனர் ஜாமீலா அப்துல் ஹாலிம், ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா, சரவாக் சுற்றுலாத்துறை தலைமை செயல்முறை ஷார்டெ சாலே, மலேசியா ஏர்போர்ட்ஸ் பிரதிநிதிகள், அரசாங்க உயர் அதிகாரிகள் மற்றும் கூச்சிங்கில் உள்ள முக்கிய தனியார் மருத்துவமனை அதிகாரிகள் கைகுலுக்கி வரவேற்றனர்.


அதே வேளையில் போண்டியானக்கிலிருந்து கேஎல்ஐஏ2 அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த AK 492 விமான பயணிகளை மலேசியா சுற்றுலாத்துறை மற்றும் ஏர் ஆசியா நிர்வாகத்தின் முக்கிய அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர்.

ஏர் ஆசியாவின் இந்த விமான சேவைகள் போண்டியானக்கின் சுபாடியோ விமான நிலையத்தில் முதல் அனைத்துலக விமான சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுபடியோ விமான நிலையத்தை வந்தடைந்த விமான பயணிகளை மேற்கு காளிமந்தான் கவர்னர் டாக்டர் ரியா நோர்ஷன்,போண்டியானக்கில் உள்ள மலேசியா தூதரக அதிகாரி ஷெக்கீர் அப்துல் ராஹிம் உட்பட பலர் வரவேற்றனர்.
இதனிடையே 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூச்சிங்-போண்டியானக் விமான சேவை மீண்டும் தொடங்கப்பட்டதில் தாம் மகிழ்ச்சி அடைவதாக சரவாக் போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லீ கிம் சின் கூறினார்.
காரணம் கூச்சிங்-போண்டியானக் தரை மார்க்க பயணம் 6 முதல் 8 மணி நேரம் பிடிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
நேரடி விமான சேவையின் வழி ஒரு மணி நேரத்தில் சென்றடையலாம் என அவர் குறிப்பிட்டார்.
விமான சேவையின் வழி உள்ளூர் நகரங்களை இணைப்பதில் ஏர் ஆசியா முக்கிய பங்காற்றி வருவதாக அவர் சொன்னார்.


இந்த நேரடி விமான சேவையால் சரவாக் மற்றும் மேற்கு காளிமன்தான் இடையிலான சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இந்த புதிய விமான சேவைகள் ஏர் ஆசியாவின் துரித வளர்ச்சியில் ஒரு பகுதி என ஏர் ஆசியா மலேசியா தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
இந்தோனேசியாவில் அதிகமான நகரங்களுக்கு ஏர் ஆசியா வெற்றிகரமாக சிறகடித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோலாலம்பூரிலிருந்து இந்தோனேசியாவில் 18 நகரங்களுக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular