
கோலாலம்பூரிலிந்து இந்தோனேசியாவின் செமாராங் நகருக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை தொடங்கியது.
இந்தோனேசியாவில் செயல்படும் மிகப்பெரிய மலிவு விலை கட்டண விமான நிறுவனம் ஏர் ஆசியா என்பதை இந்த புதிய சேவை மேலும் வலுப்படுத்தியது.
இந்த புதிய வழித்தடம் மலேசியா மற்றும் மத்திய ஜாவாவை இணைக்கிறது.
ஜென்ரல் அமாட் யானி விமான நிலையத்திற்கு அனைத்துலக விமானங்கள் திரும்புவதால், மத்திய ஜாவாவின் கலாச்சார மாண்புகள், வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள பயணிகளுக்கு எளிதாக அமைந்துவிட்டது.
இந்த புதிய விமான சேவையின் மூலம் இரு நாடுகளுக்கு இடையே இரு தரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் அதிகரிப்பதோடு, 2025-ல் 16 மில்லியன் அந்நிய சுற்றுப்பயணிகளை கவரும் இந்தோனேவின் இலக்கை அடைய துணை புரிகிறது.
இந்தோனேசியாவின் 36 அனைத்துலக விமான நிலையங்களில் ஒன்றாக ஜென்ரல் அமாட் யானி விமான நிலையம் மீண்டும் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால், பொருத்தமான நேரத்தில் ஏர் ஆசியாவின் கோலாலம்பூர்-செமாராங் நேரடி விமான சேவை அமைந்துள்ளதாக மத்திய ஜாவா கவர்னர் அமாட் லுத்பி கூறினார்.

அதேவேளையில் இந்த புதிய விமான சேவையின் மூலம் வர்த்தக மற்றும் சுற்றுப்பயண வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசிய சுற்றுப்பயணிகள் மத்திய ஜாவாவில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த புதிய விமான சேவை உதவும் என அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூர்-செமாராங் நேரடி விமான சேவை இரு நாடுகளின் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி உள்ளதாக மலேசியா சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் டத்தோ மனோகரன் பெரியசாமி கூறினார்.
இந்தோனேசிய சுற்றுப்பயணிகள் மலேசியாவின் வளமான கலாச்சாரம் மற்றும் அழகிய நகர்களை கண்டு களிக்க இந்த புதிய விமான சேவை அமைந்துள்ளதாக அவர் சொன்னார்.
மேலும் திரு நாடுகளுக்கு இடையே சுற்றுலாத்துறை மற்றும் வர்த்தக வாய்ப்புகள் அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை எதிர்கொள்ள புதிய சேவை உதவும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவின் அதிகமான குடும்ப உறுப்பினர்கள், கலாச்சார ஆர்வலர்கள் மலேசியாவிற்கு வருகை புரிவதை தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இதனிடையே இந்தோனேசியாவில் செயல்படும் மிகப் பெரிய மலிவு விலை விமான நிறுவனம் ஏர் ஆசியா தான் என்று கூறிக் கொள்வதில் தாங்கள் பெருமை அடைவதாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.

இந்தோனேசியாவில் உள்ள பெரும்பாலான நகர்களுக்கு ஏர் ஆசியா மலேசியா சிறகடித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் ஆசியா மலேசியா இந்தோனேசியாவில் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வரும் என அவர் குறிப்பிட்டார்.
இருநாட்டு சுற்றுப்பயணிகளுக்கு இந்த புதிய விமான சேவை எளிதாக பயணிக்கும் வாய்ப்புகளை ஏற்படுத்தி உள்ளதாக அவர் சொன்னார்.
செமாராங்கில் பாரம்பரிய வளத்தை கொண்ட கோத்தா லாமா, லாவாங் சேவு,சாம் பூ கோங் கோவில் மற்றும் உலகப் புகழ் கலாச்சார அம்சங்களை கொண்ட லும்பியா நகர் ஆகிய சிறப்புகளை மலேசிய சுற்றுப்பயணிகள் கண்டுகளிக்க இந்த புதிய விமான சேவை எளிதாகி விட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தோனேசியாவில் ஜாக்கார்த்தா,பாலி,மேடான், யோக்யாகர்த்தா, பான்டா ஆச்சே, மாக்காசார், பாடாங் உட்பட 17 நபர்களுக்கு ஏர் ஆசியா மலேசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


