
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவின் 2025 பயண கண்காட்சி வெகு விமர்சையாக இங்கு உள்ள புக்கிட் ஜாலில் தொடங்கியது.
முதல்முறையாக ஒரு குடையின் கீழ் பயணிகள், பயண ஏஜெண்டுகள், சுற்றுலாத்துறை அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒன்றிணைகின்றனர்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டை முன்னிட்டு மலேசிய சுற்றுலாத்துறைக்கு ஆதரவு வழங்கும் அதே வேளையில், உள்நாடு மற்றும் அனைத்துலக நகரங்களுக்கு சிறகடிக்க சிறப்பான கழிவு கட்டணங்கள் இந்த கண்காட்சியில் வழங்கப்படுகிறது.
அதே வேளையில் சுற்றுப்பயண ஏஜெண்டுகளுக்கு சிறப்பு பயணத் தொகுப்புகள் இந்த கண்காட்சியில் வழங்கப்படுகிறது.
இதனிடையே 2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டில் 47 மில்லியன் சுற்றுப்பயணிகளை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார துறை அமைச்சர் டத்தோஸ்ரீ தியோங் கிங் சிங் கூறினார்.
இதன் வழி வெ 329 பில்லியன் வருவாயை அரசாங்கம் இலக்காக கொண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கோலாலம்பூர் வழி ஏர் ஆசியாவின் விரிவான விமான சேவைகளின் மூலம் இந்த இலக்கை அடைய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கோலாலம்பூர் மலேசியர்களுக்கு ஒரு புறப்பாடு மையம் மட்டுமல்லாமல் அனைத்துலக நுழைவாயிலாக விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
உள்நாடு மற்றும் அனைத்துலக நகரங்களின் ரத்தினங்களை காண ஏர் ஆசியாவின் இந்த பயண கண்காட்சி ஒரு தளமாக விளங்குவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் மலேசிய மற்றும் அனைத்துலக சுற்று பயணிகள் இந்த பொன்னான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதனிடையே சுற்றுலாத்துறை அமைப்புகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களிடமிருந்து ஒரு சிறந்த ஒத்துழைப்பை தாங்கள் கொண்டிருப்பதால் இந்த பயண கண்காட்சி பொருத்தமான நேரத்தில் தொடங்கப்பட்டுள்ளதாக ஏர் ஆசியா குழும நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைமை அதிகாரி அமான்டா வூ கூறினார்.
இந்த ஆண்டில் மட்டும் 25 புதிய நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனது பயணிகளுக்கு சிறந்த பயண வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் இந்த பயண கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தற்போது கேஎல்ஐஏ2 முனையத்தில் 96 விழுக்காடு பயணிகள் போக்குவரத்தை ஏர் ஆசியா ஆக்கிரமித்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
கேஎல்ஐஏ2 ஏர் ஆசியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து தளமாக விளங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நுழைந்த மற்றும் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட 25.8 பயணிகளை ஏர் ஆசியா கொண்டு சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூரிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா, மத்திய ஆசியா மற்றும் மத்திய கிழக்கு உட்பட 130 க்கு மேற்பட்ட நகரங்களுக்கு ஏர் ஆசியா வெற்றிகரமாக சிறகடித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் தாஸ்கன், இஸ்தான்புல்,பலேம்பாங்,செமாராங்,பாஞ்சர்மாசின் மற்றும் டார்வின் ஆகிய நகரங்களுக்கு முதல் முறையாக ஏர் ஆசியா சிறகடிப்பதாக அவர் தெரிவித்தார்.
ஏர் ஆசியாவின் இந்த பயண கண்காட்சி ஆகஸ்டு 22 முதல் ஆகஸ்டு 24 வரை காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை ஐந்தாவது மாடி புக்கிட் ஜாலில் கண்காட்சி மையத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த கண்காட்சியில் பெரும்பாலான நகர்களுக்கு 35 விழுக்காடு கழிவு கட்டணத்தை ஏர் ஆசியா வழங்குகிறது.
முன்னதாக வரும் நூறு பேருக்கு 100 வெள்ளி ரொக்க சீட்டும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சி தொடக்க விழாவில் ஏர் ஆசியா எவியேஷின் குழுமத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம், மலேசிய சுற்றுலாத்துறை தலைமை இயக்குனர் மனோகரன் பெரியசாமி மற்றும் பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.


