
இஸ்ரேல் ராணுவத்தால் ஒடுக்கப்பட்டு வரும் காஸா மக்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என பாஸ் ஆதரவு பேரவையின் திரெங்கானு மாநில தலைவர் டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
ஒற்றுமை என்பது இனம் மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது என அவர் சுட்டிக் காட்டினார்.
ஆகையால் பாலஸ்தீனம் குறிப்பாக முஸ்லிம்களின் பிரச்சனை அல்ல. ஒரு சமூகம் ஒடுக்கப்படுவதை நாம் சகித்துக் கொள்ள முடியாது.
வரலாற்றில் இந்திய சமூகம் ஒடுக்கப்பட்டதை நாம் அறிந்துள்ளோம் என்றார் அவர்.
பாலஸ்தீன விவகாரம் இஸ்லாமிய விவகாரம் என்று தோற்றத்தை நாம் கலைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாலஸ்தீனிய போராட்டத்திற்கு அனைத்து சமூகமும் ஒன்றிணைந்து துணை நிற்க வேண்டும் என அவர் சொன்னார்.
காஸா மக்களின் அடக்குமுறை விவகாரத்தை முஸ்லிம் அல்லாத சமூகங்கள் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ், சீன மற்றும் ஆங்கில மொழிகளில் காஸா மக்களின் பிரச்சினைகள் குறித்து செய்திகள் வெளியிடப்பட வேண்டும்.
அப்பொழுது தான் பாலஸ்தீனியர்கள் எதிர் நோக்கி வரும் பிரச்சனைகளை இதர சமூகங்கள் தெரிந்து கொள்ள முடியும்.

இது மனிதாபிமான ஒற்றுமைக்கு வழி வகுக்கும் என அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது ஒரு பிளவு பட்ட உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுபோன்ற முயற்சிகள் ஒற்றுமையை வளர்க்கும் என அவர் குறிப்பிட்டார்.
ஒரு சமூகம் அடக்குமுறை செய்யப்பட்டால் இதர சமூகம் துணிந்து குரல் கொடுக்க வேண்டும்.
இந்த நிலையில் காஸா மக்களின் போராட்டத்திற்கு மலேசியா துணிந்து நிற்பதை நாம் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது இனப் பிரச்சனை அல்ல, மனிதாபிமான கொள்கை மற்றும் நீதி என அவர் குறிப்பிட்டார்.


