
நாட்டில் வெ 4,800 கோடி மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக எரிசக்தி பரிமாற்றம் மற்றும் குடிநீர் உருமாற்றத்துறை துணையமைச்சர் அம்பலப்படுத்தியுள்ள சம்பவம் ஒரு தேசிய பேரிடர் என மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் சம்மேளனம் (போம்கா) சாடியது.
கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சட்ட விரோத பிட்கொய்ன் சுரங்க நடவடிக்கைகளால் வெ 4,800 கோடி மதிப்புள்ள மின்சாரம் திருடப்பட்டுள்ளதாக அண்மையில் அந்த துணையமைச்சர் அம்பலப்படுத்தியுள்ளது அதிர்ச்சியை தருவதாக போம்கா தலைமை செயல்முறை அதிகாரி டாக்டர் சரவணன் தம்பிராஜா கூறினார்.
இந்த செயல் நாட்டின் எரிசக்தி முறை, பொருளாதாரம் மற்றும் அதன் மக்களுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும் என அவர் எச்சரித்தார்.
இந்த மாபெரும் இழப்பிற்கு யார் பொறுப்பேற்பது என அவர் கேள்வி எழுப்பினார்.
நமக்கு தெரிந்த தகவலின் படி தேசிய தேசிய மின்சாரத்தை வழங்கும் தெனாகா நேஷனல் தான்இந்த இழப்பை ஏற்றுக் கொள்ளும் என அவர் குறிப்பிட்டார்.
இந்த இழப்பை சரி செய்ய தெனாகா நேஷனல் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்யும். இறுதியில் இந்த சுமையை பயனீட்டாளர்கள் தான் ஏற்க வேண்டி இருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
வெ 4,800 கோடி என்பது ஒரு சிறிய தொகை அல்ல. தேசிய எரிசக்தி முறையை வலுப்படுத்த இந்த தொகையை கொண்டு பல திட்டங்களை வகுக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மின்சார கட்டணங்களை குறைக்கவும் மற்றும் கிராமப்புறங்களில் மின்சார திட்டங்களை விரிவாக்கம் செய்யவும் முடியும் என அவர் சொன்னார்.
இது போன்ற திருட்டு சம்பவங்களை தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாக ஆக்ககரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
அதே வேளையில் தெனாகா நேஷனல் வலிமையான கண்டறியும் முறைகளில் முதலீடு செய்ய வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த நஷ்டங்களுக்கு எப்படி தீர்வு காண்பது என்பதில் தெனாகா நேஷனல் நேர்மையாகவும் வெளிப்படை தன்மையாகவும் செயல்பட வேண்டும் என்றார் அவர்.
பதிவு செய்யப்பட்ட சுரங்க வர்த்தகங்களுக்கு சிறப்பு லைசன்ஸ் முறையை தெனாகா நேஷனல் அறிமுகப்படுத்த வேண்டும்.
அதேவேளையில் கள்ள சந்தை நடவடிக்கைகளை முறியடிக்க முறையான அமலாக்க திட்டத்தை தெனாகா நேஷனல் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
இது போன்று கள்ள நடவடிக்கைகளால் நேர்மையான மலேசியர்கள் பாதிக்கப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டார்.


