
இந்தோனேசியாவின் தென் சுமாத்திரா தலைநகரான பலேம்பாங் நகருக்கு கோலாலம்பூரிலிருந்து ஏர் ஆசியா மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்கியது.
பலேம்பாங்கில் உள்ள சுல்தான் மாமூட் பாடாருடின் 11 விமான நிலையம் அனைத்துலக அந்தஸ்தை அடைந்ததை தொடர்ந்து நேற்று கோலாலம்பூரிலிருந்து நேரடி விமான சேவையை ஏர் ஆசியா தொடங்கியது.
இந்த புதிய விமான சேவையின் மூலம் பலேம்பாங் நகரத்தின் சுற்றுலா மற்றும் பொருளாதாரம் வலிமை அடையும் என்பதில் சந்தேகமில்லை.
2025 ஆம் ஆண்டில் 14.6 மற்றும் 16 மில்லியன் அனைத்துலக சுற்றுப்பயணிகள் வருகையை இந்தோனேசியா இலக்காக கொண்டுள்ளது.
இதனிடையே மீண்டும் தொடங்கப்பட்டுள்ள ஏர் ஆசியாவின் இந்த நேரடி விமான சேவையின் மூலம் தென் சுமாத்திராவின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா துறை துரித வளர்ச்சி காணும் என தென் சுமாத்திரா கவர்னர் ஹெர்மான் டெரு கூறினார்.
இந்தோனேசியாவின் பிபிஎஸ் புள்ளி விவரப்படி 2024-ல் தென் சுமாத்திராவில் உள்ள நட்சத்திர தங்கும் விடுதிகளில் சுற்றுப்பயணிகளின் வருகை 51.85 என அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியா மீண்டும் தொடங்கியுள்ள இந்த விமான சேவையை தொடர்ந்து, அனைத்துலக சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சுல்தான் மாமூட் பாடாருடின் 11 விமான நிலையம் அனைத்துலக அந்தஸ்தை பெற்றுவிட்டதால் அனைத்துலக சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்றார் அவர்.
இதனிடையே கோவிட் 19 தாக்கத்திற்கு பிறகு பலேம்பாங் நகரத்திற்கு சிறகடிக்க ஏர் ஆசியா அதிக ஈடுபாட்டை கொண்டிருந்ததாக ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
குறிப்பாக ஹாரி ராயா கொண்டாட்ட காலங்களில் இந்த நகருக்கு வருகை புரியும் பயணிகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும் என அவர் சொன்னார்.
இந்த புதிய விமான சேவையின் மூலம் மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கிடையே வாரத்திற்கு 205 விமான சேவைகளை ஏர் ஆசியா மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தோனேசியாவில் ஜகார்த்தா, பாலி,மேடான், யோக்யாகர்த்தா, பான்டா ஆச்சே, மாக்காசார், பாடாங், பெக்கான் பாரு பாலிக்பாப்பான், லாபுவான் பாஜொ, லோம்பொக்,செமாராங் உட்பட 15 நகர்களுக்கு ஏர் ஆசியா சிறகடிக்கிறது.
பினாங்கிலிருந்து ஜாக்கார்த்தா மற்றும் மேடான் ஆகிய நகர்களுக்கு ஏர் ஆசியா விமான சேவைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த புதிய விமான சேவை குடும்பம் மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளையும் அதிகரிக்கச் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.


