
சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களின் மேம்பாட்டிற்கு வெ 14 மில்லியன் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ஏமாற்றத்தை தருவதாக செமினி சட்டமன்ற உறுப்பினரின் இந்திய சமூக சிறப்பு அதிகாரி பூபாலன் பன்னீர்செல்வம் கூறினார்.
2025 சிலாங்கூர் பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதியில் இந்த தொகை 0.02 விழுக்காடு தான் என அவர் சுட்டிக் காட்டினார்.
மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதி மன நிறைவை அளிக்கவில்லை என்றார் அவர்.
சிலாங்கூரில் இந்து சமூகத்தில் பொருளாதார நிலையை வலுப்படுத்த மாநில அரசாங்கம் என்ன திட்டங்களை வகுத்துள்ளது என்பதை வெளியிட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
2025 சிலாங்கூர் பட்ஜெட்டில் மேம்பாட்டு திட்டங்களுக்கு வெ 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த தொகையில் முதல் 6 மாதங்களில் இந்தியர்களின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்களுக்கு வெ 14 மில்லியன் செலவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் மாநில பட்ஜெட்டின் மொத்த தொகையில் இது 0.02 விழுக்காடு தான் என்பதை நினைத்துப் பார்க்கையில் பெரும் ஏமாற்றத்தை தருவதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநில மக்கள் தொகையில் இந்தியர்கள் 12 விழுக்காட்டினர். இந்த மக்கள் தொகையில் எத்தனை இந்திய இளைஞர்கள் தொழில் முனைவர்களாக உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதை மாநில அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மாநிலத்தில் உள்ள இந்திய சமூகத்திற்கு பயன் அளிக்கக்கூடிய மேம்பாட்டு திட்டங்களை மாநில அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்தியர்களின் மேம்பாட்டு திட்டங்களில் மாநில அரசாங்கம் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மடானி தொழில் முனைவர் மேம்பாட்டு திட்டத்திற்கு மாநில அரசாங்கம் கூடுதல் தொகையாக வெ 4.4 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.


