
இவ்வாண்டு ஜூன் 30ஆம் தேதி வரை திரையீடு கண்ட உள்ளூர் திரைப்படங்கள் மொத்தம் ரிம162.89 மில்லியன் பாக்ஸ் ஆபிஸ் வசூலைப் பதிவு செய்து ஊக்கமளிக்கும் செயல்திறனைக் காட்டியுள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டுகளில் 2024-இல் ரிம125.28 மில்லியன், 2023-இல் ரிம102.66 மில்லியனை விட அதிகமாகும்.
இவ்வாண்டில் முதல் 6 மாதங்களில் திரையிடப்பட்ட 39 திரைப்படங்கள் இதில் பங்களித்ததாக தொடர்பு துணையமைச்சர் தியோ நீ சிங் தெரிவித்தார். அனிமேஷன் திரைப்படமான ‘எஜென் அலி தி மூவி 2’ வசூலில் முக்கிய திரைப்படமாக அமைந்துள்ளது.
“திரையிடப்பட்டு கடந்த ஜூன் 30ஆம் தேதி வரை இத்திரைப்படம், ரிம55.2 மில்லியனை வசூலித்துள்ளது. ஆகவே, அதிக வசூல் செய்த உள்ளூர் அனிமேஷன் படமாக வரலாற்றை உருவாக்கியுள்ளது. இத்திரைப்படம் உள்ளூர் ரசிகர்களிடையே பிரபலமடைந்தது மட்டுமல்லாமல், இந்தோனேசியாவில் திரையீடு கண்ட முதல் வாரத்தில், 200,000 பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது. எங்கள் திரைப்படங்கள் இப்போது அனைத்துலக தரத்துடன் ஒப்பிடும் சிறந்த வெளியிடுகளாக இருக்கின்றன.” என தியோ பெருமிதம் அடைந்தார்.

முன்னதாக, தலைநகரில் நடைபெற்ற 34வது மலேசிய திரைப்பட விழா பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றுகையில் தியோ இவ்வாறு கூறினார். இவ்விழா நவம்பர் 8ஆம் தேதி அங்கசபுரி, கோட்டா மீடியாவில் உள்ள ஸ்ரீ அங்கச அரங்கில் நடைபெறும்.
இவ்வாண்டு புதிதாக ‘சிறந்த ஆக்ஷன் மற்றும் ஸ்டண்ட் விருது’ எனும் புதிய பிரிவு அறிமுகம் கண்டுள்ளது. 30 பிரிவுகளில் 60க்கும் மேற்பட்ட மலேசியப் படங்கள் போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூலாய் நாடாளுமன்ற உறுப்பினருமான தியோ தெரிவித்தார்.
“தயாரிப்பு குழு மற்றும் சண்டைக் காட்சிகளில் பெரும்பாலும் அதிக ஆபத்துகளை எதிர்கொள்ளும் ஸ்டண்ட் நடிகர்களின் அர்ப்பணிப்புக்கு அங்கிகாரம் கொடுக்கும் வகையில் இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது.” என்றார்.
34வது மலேசிய திரைப்பட விழாவின் விண்ணப்பங்களை ஜூலை 8 முதல் 18ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம்.


