
இன்று நடைபெறும் பிகேஆர் தலைமைத்துவ தேர்தலில் கட்சியின் துணைத் தலைவர் பதவியை கைப்பற்ற நடப்பு துணைத் தலைவர் ராபிஸி ரம்லி மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியும் முன்னாள் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினருமான நூருல் இஸாசா அன்வார் ஆகிய இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இலக்கவியல் வழி நடைபெறும் இன்றைய தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 222 பிகேஆர் தொகுதிகளைச் சேர்ந்த 32,030 பேராளர்கள் வாக்களிக்கின்றனர்.
இன்று நடைபெறும் கட்சியின் துணைத் தலைவர் தேர்தலில் தாம் தோல்வியுற்றால் பொருளாதார அமைச்சர் பதவியை தாம் ராஜினாமா செய்யப்போவதாக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ராபிஸி கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த தமது ஹிருக் பிரச்சாரத்தில் கட்சியில் நிலவி வரும் பல்வேறு குறைபாடுகள் குறித்து ராபிஸி பகிரங்கமாக வெளிப்படுத்தி வந்துள்ளார்.
பாக்காத்தான் ஹராப்பன் மீது குறிப்பாக சீனர்கள் அதிருப்தி அடைந்து வருவதால் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சியை இழக்க கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இந்த தேர்தலில் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வாரின் புதல்வி நூருல் இஸாசாவிடம் தோல்வி கண்டால் பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையில் கட்சியில் தாம் தொடர்ந்து நீடிக்கப் போவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்த துணைத் தலைவர் போட்டி ஒரு திட்டமிடப்பட்ட போட்டி என்று தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
பிகேஆர் தோற்றுவிக்கப்பட்டது முதல் கட்சியின் சீர்திருத்துக்காக தாம் தொடர்ந்து போராடி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்று முடிந்த கட்சியின் தொகுதி தேர்தல்களில் தாம் பெரிதும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக அவர் சொன்னார்.
இதனிடையே துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிட்டாலும் ராபிஸியை தமது உற்ற நண்பராக தாம் கருதி வருவதாக நூருல் கூறினார்
துணைத் தலைவர் பதவிக்கு தாம் போட்டியிடுவது தமது சொந்த முடிவு என அவர் தெரிவித்தார்.


