
எஸ்பிம் தேர்வில் தெலுங்கு மொழியும் ஒரு தேர்வு பாடமாக வேண்டும் என்ற மலேசிய தெலுங்கு சங்கத்தின் கோரிக்கையை தாம் அரசாங்கத்திடம் முன்வைக்க போவதாக தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி உறுதியளித்தார்.
இந்த பரிந்துரையை கல்வி அமைச்சிடம் கொண்டு சேர்த்த பின்னர், இதன் அடுத்த கட்ட நடவடிக்கை தாம் கண்காணிக்கப் போவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்று இங்கு தெலுங்கு அகடமி மலேசியா ஏற்பாடு செய்த தேசிய அளவிலான தெலுங்கு புத்தாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
தங்கள் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தெலுங்கு மொழி மற்றும் கலை கலாச்சாரத்தை மலேசிய தெலுங்கு சங்கம் தொடர்ந்து கற்பித்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.

தற்போது சுமார் 7000 மாணவர்கள் தெலுங்கு மொழியை எழுதவும் பேசவும் தெரிந்திருக்கும் இவ்வேளையில், மலேசிய தெலுங்கு சங்கம் இக்கோரிக்கையை அரசாங்கத்திடம் முன் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தங்கள் சமூகத்திற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக செயல்படுவதற்கு உதவும் வகையில், வெ 50 லட்சம் மானியம், வரி விலக்கு மற்றும் உகாதி பண்டிகை காண விடுமுறை போன்ற கோரிக்கைகளை மலேசிய தெலுங்கு சங்கம் தம்மிடம் முன் வைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கொண்டாட்டத்தில் சுமார் 2000 பேர் கலந்து கொண்டதாக மலேசிய தெலுங்கு சங்கத்தில் துணைத் தலைவர் சத்யா சுதாகரன் கூறினார்.


