
மலேசிய இந்து சங்கம், ஸ்கூடாய் பேரவையின் 48-ம் ஆண்டு கூட்டம் இன்று ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் காலை 10.00 மணிக்கு துவங்கியது. மாநில இந்து சங்கத் தலைவர் சங்கரத்னா இரா. இராமகிருஷ்ணன் மற்றும் ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத் தலைவரும், பேரவை ஆலோசகருமான டத்தோ கே.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துக் கொண்ட வேளையில் ம இ கா தொகுதி தலைவரும், மாவட்ட மன்ற உறுப்பினருமான உயர்திரு வி.சங்கரபாண்டியன் மற்றும் அவர்தம் கிளைத் தலைவர்கள், தொழிலதிபர்கள் திரு குமரன், திரு ரூபன், மற்றும் மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு ரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். வரவேற்புரை ஆற்றிய செயலாளர் திரு சுதாகர் பேரவை செய்த பணிகளைப் பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் தொண்டர்மணி க.சேகரன் 12 வருடங்களாக பேரவைத் தலைவராக சிறப்பாக பணியாற்ற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் சமயத்திற்கு எதிராக நாட்டில் நடக்கும் பல செயல்கள் குறிப்பிட்டு சமயக் கல்வியை தொடர்ந்து சிறப்பாக போதிப்பதால் அடுத்த தலைமுறை சமய விழிப்புணர்வு பெற்ற சமுதாயமாக விளங்கும் எனக் கூறினார்.

மாநிலத் தலைவர் தமது உரையில் மாநிலத்தில் அதிக மாணவர்கள் சமயக் கல்வி பயிலும் பேரவையாக ஸ்கூடாய் பேரவை திகழ்கின்றது என பாராட்டினார். தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய ஆலயத் தலைவர் டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் தேவை அறிந்து ஸ்கூடாய் பேரவை பல சேவைகளை ஆற்றி வருவதாகவும், பேரவை நிகழ்வுகளுக்கு ஆலயம் என்றும் துணை நிற்கும் என்றும் கூறினார். புது நிர்வாகக் குழு உறுப்பினர்கள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்


