
பெட்டாலிங் ஜெயா பிப் 27
காப்புறுதி பிரீமியம் ஏற்றத்தை அரசாங்கம் கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலேசிய பயனீட்டாளர்கள் சங்கங்களின் சம்மேளனம்(போம்கா) வலியுறுத்தியது.
இந்த பிரீமியம் கட்டண உயர்வால் பயனீட்டாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதாக போம்கா தலைவர் டத்தோ டாக்டர் என். மாரிமுத்து கூறினார்.
வாழ்க்கை செலவினங்கள் விலை ஏற்றத்தால் போராடி வரும் நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்கு இந்த பீரிமியம் ஏற்றம் மற்றொரு சுமை என அவர் சுட்டிக் காட்டினார்.
காப்புறுதி தொழிற்துறை குறிப்பிட்ட லாபத்தை அடைந்து வருவதாக அறிக்கைகள் வெளிவந்த போதிலும், பிரீமியம் ஏற்றம் கண்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சை கட்டணங்கள் கட்டுப்படுத்தப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
இந்த மருத்துவ பணவீக்கம் தான் காப்புறுதி பிரீமியம் ஏற்றத்திற்கு நேரடி காரணம் என்றார் அவர்.
இதன் காரணமாக பயனீட்டாளர்களிடம் சுமைகள் தள்ளப்படுவதாக அவர் சாடினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் பயனீட்டாளரின் நலன்களை கருத்தில் கொண்டு பேங்க் நெகரா உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும் தனியார் மருத்துவமனை சேவை கட்டணங்களை கண்காணிக்கவும் மற்றும் கட்டுப்படுத்தவும் பிரதமர் அலுவலகத்தின் கீழ் ஒரு கூட்டு நடவடிக்கை மன்றத்தை அரசாங்கம் அமைக்க வேண்டும் என அவர் சொன்னார்.
மேலும் நீண்ட கால திட்டமாக ஒரு தேசிய சுகாதார காப்புறுதி திட்டத்தை அறிமுகப்படுத்துவது குறித்து மடானி அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த திட்டம் அமலாக்கம் செய்யப்பட்டால் அனைத்து மலேசியர்களின் வாழ்க்கை செலவினத்தை குறைக்க உதவும் என்றார் அவர்.
இந்தத் திட்டத்தை கட்டம் கட்டமாக அரசாங்கம் அமலாக்கம் செய்ய வேண்டும் என அவர் சொன்னார்.
காப்புறுதி பிரீமியம் ஏற்றும் குறித்து பயனீட்டாளர்களுக்கு போதுமான தகவல் அல்லது புள்ளி விவரம் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவமனைகள் தங்களின் விருப்பம் போல் மருத்துவ சிகிச்சை கட்டணத்தை உயர்த்தி வருகின்றனர்.
இது பயனீட்டாளர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தி வருகிறது.
பல நாடுகள் மருத்துவ காப்புறுதிக்கு மருத்துவ இழப்பீடு விகிதாச்சார முறையை கட்டாயமாக்கி வருகிறது.காப்புறுதி பீரிமியம் லாபத்தின் ஒரு பகுதியை நோயாளிகளின் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
ஆனால் மலேசியாவில் இந்த நடைமுறை இல்லாததால் பயனீட்டாளர்கள் சுமைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
நாட்டில் பல காப்புறுதி நிறுவனங்கள் தங்களின் நிதி இழப்பீடு கோரிக்கை குறித்து ஆதாரங்களை முன் வைப்பதில்லை. இந்த நிறுவனங்கள் பீரிமியம் ஏற்றத்திற்கு மருத்துவ செலவின அதிகரிப்பை ஒரு காரணமாக காட்டக்கூடாது.
காப்புறுதி அதிகாரிகளுக்கு பெரிய அளவிலான போனஸ் வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.


