
ஜியார்ஜ் டவுன் பிப் 18
எங்கள் உணவக சேவையில் அதிருப்தி இருந்தால் எங்களிடம் நேரடியாக முறையிடுங்கள்’ என ஸ்ரீ ஆனந்த பவன் உணவக குழுமத்தின் இயக்குனர் டத்தோ வீ. ஹரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.
இதை விடுத்து எங்கள் உணவக சேவையில் அதிருப்தியின் காரணமாக சமூக ஊடகத்தில் விமர்சனம் செய்வதை தவிர்த்துக் கொள்ளும்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அவர் ஆலோசனை கூறினார்.
அண்மைய தைப்பூச கொண்டாட்ட தினத்தின் போது பினாங்கு லிட்டில் இந்தியாவில் உள்ள ஸ்ரீ ஆனந்த பவன் உணவகத்தில் உணவு உட்கொண்ட இரு நபர்கள் இந்த உணவகத்தின் சேவையில் அதிருப்தி குறித்து சமூக ஊடகத்தில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
இங்குள்ள ஆனந்த பவன் உணவகத்தில் சைவ உணவு அதிக விலையில் விற்கப்படுவதாக இவர்கள் சமூக ஊடகம் ஒன்றில் முறையிட்டுள்ளனர்.
ஆனால் இந்த உணவகத்தில் உணவு உட்கொண்ட இரு மலாய் வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தின் உணவின் தரமும் மற்றும் நியாயமான விலை குறித்தும் சமூக ஊடகத்தில் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
உணவக சேவையில் குறைபாடுகள் இருந்தால் முதலாளிகளை நேரடியாக தொடர்பு கொண்டு பேச வேண்டும் என அவர் சொன்னார்.
தனது வாடிக்கையாளர்களுக்கு தரமான சேவையை வழங்குவது தான் முதலாளிகளின் நோக்கமாகும் என்றார் அவர்.
கடந்த 34 ஆண்டுகளாக தாம் உணவகங்களை நடத்தி வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வாடிக்கையாளர்களின் தேவைகள் என்ன என்பதை தம்மால் நன்கு உணர முடியும் என அவர் தெரிவித்தார்.
‘லாபத்தை சம்பாதிக்க தான் உணவகங்களை நாங்கள் நடத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களின் தேவை தான் எங்களின் முன்னுரிமை’ என அவர் குறிப்பிட்டார்.
மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தில்(பெரிமாஸ்) முன்னாள் செயலவை உறுப்பினராக பல ஆண்டுகள் தாம் இருந்து வந்ததாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்து வருவதால் உணவகங்களை நடத்தும் வழிமுறை குறித்து தமக்கு நன்கு தெரியும் என அவர் சொன்னார்.
சமூக சேவைகளையும் செய்து வருகிறோம்!

ஒரு தொழிலதிபர் என்ற நிலையில் சமூக சேவைகளையும் தாம் செய்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
ஆலய திருப்பணி, ஆலய கட்டுமான பணி, தமிழ் பள்ளிகள் போன்ற பணிகளுக்கு தாம் அவ்வப்போது உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
உதவி என தம்மை நாடிவரும் எவரையும் தாம் நிராகரித்ததில்லை என அவர் சொன்னார்.
‘லாபத்தை சம்பாதிப்பது மட்டும் எனது நோக்கமில்லை. சமூகப் பணிகளை செய்வதும் எனது கடமைகளில் ஒன்று’ என அவர் தெரிவித்தார்.
‘ எங்கள் உணவக சேவையில் குறைபாடுகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொள்ள நாங்கள் தயார்’ என அவர் தெரிவித்தார்.
இது போன்ற குறைபாடுகளுக்கு உணவகத்தில் தொழிலாளர்கள் பற்றாக் குறையும் ஒரு காரணமாக இருந்து வருவதாக டத்தோ ஹரி கிருஷ்ணன் கூறினார்.


