
கோலாலம்பூர் பிப் 17
நாட்டில் திடீர் பொதுத் தேர்தல் நடைபெறக்கூடும் என பெர்சாத்து கட்சியின் அண்மைய அறிக்கை அக்கட்சியில் நிலவி வரும் உட்பூசலை திசை திருப்ப நடத்தப்பட்டு வரும் நாடகம் என பாக்காத்தான் ஹராப்பன் செகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.யுனேஸ்வரன் கூறினார்.
அண்மைய காலமாக பெர்சாத்து தலைவர் முஹிடின் யாசின் மற்றும் துணைத் தலைவர் ஹம்சா ஜைனுடின் ஆதரவு அணிகளுக்கிடையே உட்பூசல் மோசம் அடைந்து வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மேலும் பொது நிகழ்ச்சிகளில் இவ்விரு தலைவர்கள் ஒன்றாக இணைந்து தோன்றுவது கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த விவகாரங்களை சீர்தூக்கிப் பார்த்தால், மக்களின் கவனத்தை திசை திருப்ப பெர்சாத்து நடத்தி வரும் நாடகம் இது என்றார் அவர்.
திடீர் தேர்தலை சந்திக்க பெர்சாத்து தயாராகி வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அஸ்மின் அலியின் அறிக்கை குறித்து யுனேஸ்வரன் கருத்துரைத்தார்.
கட்சியில் பிளவு தவிர்க்க கட்சியின் தலைமைத்துவ வரிசைக்கு சமரசம் காணப்பட்டுள்ளதாக கடந்த நவம்பரில் முஹிடின் கூறியிருந்தார்.
இருப்பினும் முஹிடினின் இந்த சமரச முயற்சியில் அக்கட்சியின் பல தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


