
இந்தியாவிற்கு செல்ல முடியுமா? என கனவு கண்டிருந்த இந்திய பாமர மக்களை அங்கு பறக்க வைத்த பெருமை உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியாவிற்கே சேரும் என ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.
2001 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பாமர இந்தியர்களின் கனவுகளை நிஜமாக்கியது ஏர் ஆசியா தான் என்றார் அவர்.
அந்த காலக்கட்டத்தில் இந்தியாவின் சென்னை, மும்பை மற்றும் டெல்லி போன்ற நகரங்களுக்கு மாஸ் விமான நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்தது.
ஆனால் அந்த நகரங்களுக்கான விமான கட்டணம் பாமர மக்களின் கனவுகள் கனவாக மட்டுமே இருந்து வந்தது.
ஆனால் இன்று இவர்களின் கனவுகளை ஏர் ஆசியா நனவாக்கியது.
தோட்டப் புறங்களைச் சேர்ந்த பாமர மக்களும் இந்தியாவில் தங்களுடைய பூர்வீக ஊர்களுக்கு எளிதில் சென்று வர ஏர் ஆசியா வழி வகுத்து தந்துள்ளது.
மலிவான விமான கட்டணத்தில் மகிழ்ச்சியுடன் இவர்கள் ஏர் ஆசியா விமானங்களில் பயணித்து வருகின்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணங்கள், யாத்திரை பயணங்கள் மற்றும் வர்த்தக பயணங்களுக்காக ஆயிரக்கணக்கான மலேசிய இந்தியர்கள் ஏர் ஆசியா விமானங்களில் பயணித்து வருவது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது.
ஏர் ஆசியா மலிவான கட்டணத்தில் தரமான சேவைகளை வழங்கி வருகிறது. ஆகையால் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் ஏர் ஆசியாவிற்கு தொடர்ந்து தங்களின் ஆதரவை வழங்கி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
‘இந்தியாவில் திருச்சிக்கு தான் முதல் விமான சேவையை நாங்கள் தொடங்கினோம். ஆனால் இன்று கோலாலம்பூரிலிருந்து இந்தியாவில் 15 நகரங்களுக்கு ஏர் ஆசியா நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. இது ஏர் ஆசியாவின் சாதனை என்று தான் கூற வேண்டும். காரணம் எந்தவொரு விமான நிறுவனமும் இதை செய்யவில்லை’ என்றார் அவர்.

இன்று உலகளாவிய இந்துக்களை உத்ரா பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் ஒன்று குவிக்கும் கும்பமேளா கொண்டாட்டத்திற்கு ஏர் ஆசியா பெரும் பங்காற்றி வருகிறது.
உத்ர பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிற்கு ஏர் ஆசியாவின் நேரடி விமான சேவையின் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோலாலம்பூரிலிருந்து அந்நகருக்கு படையெடுத்து வருகின்றனர்.
6,12 மற்றும் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த அபூர்வ கொண்டாட்டத்திற்கு மலேசிய இந்துக்களை அங்கு கொண்டு செல்ல நாங்கள் பெருமை அடைகிறோம் என அவர் குறிப்பிட்டார்.
இந்துக்களின் புனிதமான கங்கை நதிக்கு செல்ல முடியுமா? என்ற கேள்வி இந்நாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இந்துக்களில் மனதில் எழுந்து வந்துள்ளது என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் இன்று ஏர் ஆசியா உங்கள் அனைவரையும் அங்கு கொண்டு செல்ல விமான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது என அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது இந்தியாவில் சென்னை, திருச்சி, கோழிக்கோடு, லக்னோ, பெங்களூரு, ஜெய்ப்பூர் திருவேந்திரம்,அமிர்தரஸ், கொச்சின், அமெதபத், ஹைதராபாத், கல்கத்தா, போர்ட் பிளேர், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு சிறகடித்து வருகிறது.
அடுத்து தென்னிந்தியாவில் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றான மதுரைக்கு சிறகடிக்க இந்திய அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசியா மற்றும் இந்திய அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் காணப்பட்டால் கோலாலம்பூரிலிருந்து மதுரைக்கு சிறகடிக்க ஏர் ஆசியா தயார் என அவர் தெரிவித்தார்.
இந்தியா மற்றும் சீனா ஆகிய பெரிய நாடுகள் ஏர் ஆசியாவின் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும்.
குறிப்பாக இந்தியாவில் மேலும் கால் பதிக்க தாங்கள் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஜொகூர் பாரு -சென்னை நேரடி விமான சேவை குறித்து பேச்சு வார்த்தை

இதனிடையே ஜொகூர் பாரு-சென்னை நேரடி விமான சேவையை தொடங்குவது குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
ஜொகூர் ஒரு நல்ல விற்பனை சந்தையாக நாங்கள் கருதுகிறோம். ஆகையால் ஜொகூர் பாரு-சென்னை நேரடி விமான சேவையை தொடங்குவது குறித்து அரசாங்கங்களுக்கிடையே இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
ஜொகூரில் சுற்றுலா துறையை மேம்படுத்த ஜொகூர் மாநில அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையை நடத்தி வருகிறோம்.
மேலும் செனாய் விமான நிலையம் விரிவாக்கம் குறித்து மாநில அரசாங்கத்துடன் பேசப்பட்டு வருகிறது.
சென்னையிலிருந்து ஜொகூர் பாரு வந்தடையும் சுற்றுப்பயணிகள் ஜொகூரில் டெசாரு போன்ற சுற்றுலா தளங்களை கண்டு களிக்கலாம்.
டெசாரு அனைத்துலக சுற்றுலா பயணிகளை கவரும் அழகிய கடலோர சுற்றுலா தளமாகும்.
மேலும் சென்னையிலிந்து ஜொகூர் பாரு வந்தடையும் இந்திய சுற்றுப்பயணிகள் அண்டை நாடான சிங்கப்பூருக்கு எளிதில் செல்ல முடியும்.
இவர்கள் சிங்கப்பூருக்கு செல்ல அனைத்து பாஸ் போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
ஆகையால் ஜொகூர் பாரு-சென்னை நேரடி விமான சேவையை தொடுங்க ஏர் ஆசியா தீவிரம் காட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
கோவிட் தாக்கத்தை சமாளித்தது தான் ஏர் ஆசியாவின் உச்சக்கட்டம்

2020 ஆம் ஆண்டு கோவிட் 19 தாக்கத்தால் உலகமே ஸ்தம்பித்து போனது. ஆனால் அந்த காலகட்டத்திலும் ஏர் ஆசியா தாக்குப்பிடித்து நிலைமையை சமாளித்தது. இது தான் ஏர் ஆசியாவின் உச்சக்கட்டம் என ஃபோ லிங்கம் கூறினார்.
சுமார் 3 ஆண்டுகள் வான் போக்குவரத்து மூடப்பட்டது. எங்களின் அனைத்து விமானங்களும் தரையிறக்கம் செய்யப்பட்டன. அந்த நேரத்தில் ஏர் ஆசியா நிறுவனர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் மன உறுதியுடன் துணிச்சலுடன் செயல்பட்டு இந்த விமான நிறுவனத்தை தக்க வைத்தார் என்று கூறிக்கொள்வதில் பெருமை கொள்கிறோம் என்றார் அவர்.
அதே வேளையில் 28 டிசம்பர் 2014 ஆம் ஆண்டில் இந்தோனேசியா ஜாவா கடலில் ஏர் ஆசியா விமானம் விழுது நொறுங்கி 162 உயிர்கள் பலிகொண்ட சம்பவம் தான் ஏர் ஆசியாவின் மிகத் துயரமான காலமென அவர் சுட்டிக் காட்டினார்.
ஏர் ஆசியா வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள் என அவர் சொன்னார்.
நாம் தான் நம்மை ஊக்குவித்துக் கொள்ள வேண்டும்
வாழ்க்கையில் ஒரு நிலையை அடைய நாம் தான் நம்மை ஊக்குவித்துக் கொள்ள வேண்டும்.
‘என்னை யாரும் ஊக்குவிக்கவில்லை. நானே என்னை ஊக்குவித்துக் கொண்டேன். இது தான் உண்மை’ என அவர் குறிப்பிட்டார்.
அதே போல் ஏர் ஆசியா பணியாளர்கள் தாங்களே தங்களை ஊக்குவித்துக் கொள்ள வேண்டும் என அவர் சொன்னார்.
ஏர் ஆசியா பணியாளர்கள் ஒரு குடும்பமாக செயல்பட்டு வருகின்றனர். சில வேலைகளில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அதையும் கடந்து கடமைகளில் கவனம் செலுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
என்னைப் பற்றி…..
‘என்னைப் பற்றி சொல்வதற்கு அதிகம் ஒன்றும் இல்லை. நான் ஒரு பிரம்மச்சாரி. எனக்கு 91 வயதுடைய தாயார் அம்பாங் ஜெயாவில் வசித்து வருகிறார். வாரத்திற்கு ஒரு முறை சென்று என் தாயாரை கண்டு வருவேன்’ என அவர் சொன்னார்.
பள்ளிப் பருவம் முடிந்ததும் லோங் மேன் புத்தக வெளியீட்டு நிறுவனத்தில் பணியை தொடங்கி னேன். 3 ஆண்டுகளுக்குப் பிறகு இஎம்ஐ இசை நிறுவனத்தில் இணைந்தேன். ஒரு நாள் டோனி பெர்னாண்டஸ் என்னை அழைத்து தமது வார்னர் இசை நிறுவனத்தில் இணையும்படி கேட்டுக் கொண்டார்.
பிறகு அங்கிருந்து விலகிய டோனி பெர்னாண்டஸ் ஒரு நாள் தம்மை அழைத்து தாம் ஒரு விமான நிறுவனத்தை வாங்கியுள்ளதாகவும் அதில் வந்து இணையும் படி கேட்டுக் கொண்டார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும் 6 மாதங்களுக்கு மட்டும் தமது விமான நிறுவனத்தில் பணி புரியும் படியும் வலியுறுத்தினார்.
அன்று இணைந்து இன்று வரை சுமார் 24 ஆண்டுகள் ஏர் ஆசியாவில் பணியாற்றி வருவதாக ஃபோ லிங்கம் கூறினார்.
ஏர் ஆசியாவின் 5 விமான நிறுவனங்களை கண்காணித்து வருகிறார்

புகழுடன் ஃபோ லிங்கம் என்றழைக்கப்பட்டு வரும் தருமலிங்கம் கனகலிங்கம் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஏர் ஆசியா எவியேஷன் குழும நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஏர் ஆசியாவின் பணி நடவடிக்கைகளில் தமது 20 ஆண்டுகால அனுபவத்தை அர்ப்பணித்து வருகிறார்.
மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள ஏர் ஆசியாவின் 5 விமான நிறுவனங்களை ஃபோ லிங்கம் கண்காணித்து வருகிறார்.
இந்த விமான நிறுவனங்களின் துரித வளர்ச்சிக்கு இவர் ஆற்றி வரும் பங்கு அளப்பரியது.
ஏர் ஆசியா குழும நிறுவனத்தில் இவர் பல உயர்நிலை பதவிகளை ஆற்றி வந்துள்ளார்.


