Sunday, April 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

தம்போய் வட்டாரத்தில் மீண்டும் மலர்ந்தது தமிழர் திருநாள்!

கடந்த 4/2/2025 செவ்வாய்க்கிழமை தம்போய் தமிழர் ஐக்கிய சங்க ஏற்பாட்டில் தமிழர் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மாநில ம.இ.கா முன்னாள் தலைவர் மதிப்புமிகு டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் அவர்களும் , பெர்மாஸ் ஜெயா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு எம்.எம்.சாமி அவர்களும் சுற்று வட்டார சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் விழாவில் கலந்து விழாவிற்கு அணிசேர்த்தனர். நிகழ்ச்சி 3 மணியளவில் பாரம்பரிய போட்டிகளுடன் தொடங்கியது. உறி அடித்தல், புள்ளிக்கோலம் வரைதல், சரம் தொடுத்தல், தோரணம் பின்னுதல், வர்ணம் தீட்டுதல், பேச்சுப்போட்டி, திருக்குறள் மனனப் போட்டி ஆகிய போட்டிகளில் பலதரப்பட்ட வயதினர் பங்கெடுத்தனர். போட்டிகளுக்குப் பின்னர் தமிழர் திருநாளின் வரலாறு, சிறப்பு பற்றி மேனாள் விரிவுரையாளர் மதிப்பிற்குரிய தமிழ்ச்சுடர் இராம. சேதுபதி அவர்கள் உரையாற்றினார். கோ.சாரங்கபாணி அவர்களின் தலைமையில் மலாயா முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்ட தமிழர் திருநாள் மீண்டும் நம் நாட்டில் கொண்டாடப்படுவது சிறப்பு என்றும் அதற்கு வித்திட்டவர்களின் உன்னத நோக்கத்தை ஆராய்ந்து அவ்வழியில் நாம் செல்வது நம் கடமையாகும் என்றும் அதனை இன்று தம்போய் தமிழர் ஐக்கிய சங்கத்தின் நிறுவனர் தெய்வத்திரு இராமலிங்கம் அவர்கள் ஆண்டுதோறும் இவ்விழா தொடர வேண்டும் எனும் கனவை அவரின் மகளும் தம்போய் தமிழர் ஐக்கிய சங்கத்தின் தலைவருமான திருமதி இரா.விஜயலெட்சுமியும் அவர்தம் செயலவையினரும் முன்னிருந்து செயலாற்றியது சிறப்புமிக்க செயலாகும் என்று பாராட்டினார்.

தொடர்ந்து நிகழச்சிக்கு வருகையளித்த சிறப்பு விருந்தினர்கள் தம்போய் தமிழர் ஐக்கிய சங்கத்தின் ஸ்தாபகர் தெய்வத்திரு சி.இராமலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நினைவாஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியை மெருகூட்டும் வகையில் நம் பாரம்பரிய நடனத்தை நடன ஆசிரியை திருமதி டயானா அவர்களின் மாணவிகள் சீர்மையுடன் வழங்கினர். வருகை புரிந்தோர் அனைவரின் பாராட்டை நடனமணிகள் பெற்றனர்.

நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த தம்போய் தமிழர்
ஐக்கிய சங்க தலைவர் திருமதி இரா.விஜயலெட்சுமி அவர்கள் தம் உரையில் நிகழ்ச்சிக்கு வருகையளித்த பொதுமக்களுக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்தார். தமிழர் திருநாள் நிகழ்ச்சியைத் தம் தந்தையார் தெய்வத்திரு சி.இராமலிங்கம் ஐயா அவர்தம் செயலவையினரின் ஆதரவோடு 2012 ல் கொண்டாடியதாகக் கூறினார். தம் தந்தையின் நீண்ட நாள் கனவை மீண்டும் நினைவாக்க உதவிய சுற்று வட்டார அன்பர்களுக்கும் தம் தந்தையோடு பயணித்த அவரின் சகாக்களுக்கும் நன்றி நவின்றார். மேலும் நிகழ்ச்சி தங்கு தடையின்றி நடைபெற பூலாய் தொகுதி ம.இ.க.தலைவர் திரு பன்னீர்செல்வம் ஏற்பாடு செய்த கூடாரங்களுக்கும், தம்போய் ஸ்ரீசுப்பிரமணிய ஆலயம் வழங்கிய சிற்றுண்டிக்கும் நன்றி மலர்களைச் சமர்பித்தார். அனைவரின் வற்றாத ஆதரவு என்றும் தொடரவேண்டும் என்று தம் உரையில் கேட்டுக்கொண்டார்.

மாநில முன்னாள் ம.இ.க.தலைவரும், ஸ்கூடாய் பாலசுப்பிரமணிய ஆலயத் தலைவருமான மதிப்பிற்குரிய டத்தோ கே.எஸ். பாலகிருஷ்ணன் அவர்களும் சிறப்பு வருகையாளர்களும் பொங்கல் பானையில் பால் ஊற்றி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்குப் பரிசுகளை வழங்கியபின் விருந்தோம்பலுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

வருகையாளர்களின் பூரிப்பில் நிகழ்ச்சியின் சிறப்பு தென்பட்டது. பேச்சுப்போட்டியில் செல்வி அஷ்லிக்கா பெர்ணாண்டஷ் ஜோன் தமிழர் பண்பாடு என்ற தலைப்பில் வருகையாளர்களைக் கவரும் வண்ணம் கருத்துகளை முன்வைத்து முதலிடம் வென்றார். செல்வி மோனித்தா துரையரசு புள்ளிக்கோலத்தை வடிவமாக வரைந்து முதலிடம் பெற்றார். 1 நிமிடத்திற்குள் உறியடித்து அப்போட்டியில் முதல் பரிசை வென்றார் செல்வன் காளிஸ்வரன் ஜோசப். தோரணம் பின்னும் போட்டியில் செல்வன் துர்கேஷ்வரன் இராமசந்திரன் மற்ற போட்டியாளர்களைவிட நுட்பமாக தோரணத்தைப் பின்னி முதல் பரிசு பெற்றார். சரம் தொடுக்கும் போட்டியில் வடிவமான முறையில் சரம் தொடுத்து திருமதி ஐரின் முதல் பரிசைத் தட்டிச்சென்றார். படிநிலை 1 திருக்குறள் போட்டியில் செல்வன் சரவணா பலராமன் முதல் பரிசை வென்றார், படிநிலை 2 பிரிவில் செல்வி சனவிக்காஷினி புஷ்பநாதன் முதல் பரிசை வென்றார்.
பாலர் பள்ளி மாணவர்களுக்கான வண்ணம் தீட்டும் போட்டியில் சக்தி வேலினி முதல் பரிசை வென்றார். போட்டியாளர்களின் ஆதரவும் பொதுமக்களின் ஊக்குவிப்பும் நிகழ்ச்சியை இனி வரும் காலங்களில் தொடரவேண்டும் எனும் ஆர்வத்தை ஊட்டுவதாக நிகழ்ச்சியை நெறியுடன் வழிநடத்திய தம்போய் தமிழர் ஐக்கிய சங்க துணைத்தலைவர் திரு முருகன் சண்முகம் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular