
சுபாங் ஜன 27
வரும் மார்ச் மாதம் சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மற்றும் சங்ஷா நகர்களுக்கான நேரடி விமான சேவை அறிவிப்பை தொடர்ந்து, எதிர்வரும் 11 ஏப்ரல் 2025-ல் கோலாலம்பூர்-சியாமின் இடையிலான நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் அறிவித்துள்ளது.
இந்த புதிய விமான சேவை மலேசியா மற்றும் சீனாவிற்கிடையே தொடர்பை மேலும் வலுப்படுத்துகிறது.
சுறுசுறுப்பான மற்றும் சக்தி வாய்ந்த சந்தையில் பாத்தேக் ஏர் தனது விரிவாக்கத்தை இந்த விமான சேவை பிரதிபலிக்கிறது.

தென்கிழக்கு சீனாவில் பூஜியான் மாகாணத்தில் உள்ள சியாமின் இயற்கை அழகை கொண்ட நிலப்பரப்பு, பாரம்பரிய அம்சங்கள் மற்றும் வலிமையான பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு அற்புதமான நகரமாகும்.
இந்த நகரத்தில் உள்ள காலனித்துவ கட்டிடங்கள் தனி சிறப்பு மிக்கது என்று தான் கூற வேண்டும்.
மேலும் இந்த நகரத்தில் செழிப்புமிக்க ஒரு துறைமுகம் மற்றும் அதி தொழில்நுட்ப தொழில் பேட்டைகள் உள்ளன.அனைத்துலக வர்த்தகத்தில் சியாமின் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது.
சியாமின் நகருக்கான விமான சேவையை தொடர்ந்து, சீனாவில் 9 நகரங்களுக்கு பாத்தேக் ஏர் நேரடி விமான சேவை மேற்கொள்கிறது.
சீனாவில் பெய்ஜிங்,சாங்சா,ஹய்காவ்,செங்டு,குவாங்ஜாவ்,ஹாய்காவ்,குன்மிங், சாங்ஜி மற்றும் செங்ஜாவ் ஆகிய 9 நகரங்களுக்கு பாத்தேக் சிறகடிக்கிறது.
இதனிடையே சீனா பொருளாதார துறையில் துரிதமாக வளர்ச்சி கண்டு வருவதால், அந்நாட்டுக்கான அனைத்துலக பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.

இந்த நிலையில் மலேசியா மற்றும் சீனாவிற்கிடையே சுற்றுலா மற்றும் பொருளாதாரம் மேலும் வலுவடைய செய்ய, பாத்திக் ஏரின் இந்த புதிய விமான சேவை உறுதுணையாக இருக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சீனாவின் துரித பொருளாதார வளர்ச்சிக்கு இந்த புதிய விமான சேவை ஒரு தூண்டுதலாக அமைவதோடு, வர்த்தக மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதியை இந்த சேவை ஏற்படுத்தும் என அவர் சொன்னார்.
மலேசியா மற்றும் சீனாவிற்கு இடையே இலவச விசா தளர்வு, இருநாட்டு பயணிகளுக்கு சாதகமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாத்தேக் ஏரின் இந்த புதிய விமான சேவை இரு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை மேலும் வலுபெறும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
துரித பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் சீனாவில்,பாத்தேக் ஏர் தொடர்ந்து வலிமையாக கால் பதித்து வரும் என டத்தோ சந்திரன் ராம மூர்த்தி குறிப்பிட்டார்.
சியாமின் நகருக்கு வாரத்திற்கு 4 விமான சேவைகளை பாத்தேக் ஏர் மேற்கொள்ளும்.
திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இந்த சேவை மேற்கொள்ளப்படும்.


