
சிரம்பான் ஜெயா ஜன 26
எதிர்வரும் சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியை சேர்ந்த 815 மூத்த குடிமக்களுக்கு ஊக்கத் தொகையாக தலா வெ 200 வழங்கப்பட்டது.
இந்த ஊக்கத் தொகையை பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் மற்றும் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கீ சின் இணைந்து வழங்கினர்.
கடந்த 2024 ஆம் ஆண்டில் பதிந்து கொண்ட சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் மற்றும் சீன மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
தங்களின் கொண்டாட்டங்களுக்கு ஏற்ப 70 வயது மதிக்கத் தக்க மூத்த குடிமக்களுக்கு இந்த ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
நேற்று சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த 462 பேர் இந்த ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த ஊக்கத் தொகையை பெறாதவர்கள், சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி அலுவலகத்தை தொடர்பு கொண்டு அதனை பெற்றுக் கொள்ளலாம் என சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் கூறினார்.
குடும்பம், சமூகம் மற்றும் மாநிலத்திற்கு தங்களின் அர்ப்பணிப்பை கருத்தில் கொண்டு இந்த மூத்த குடிமக்களுக்கு நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் இந்த ஊக்க தொகையை வழங்குவதாக அவர் சொன்னார்.

நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் தலைமையிலான மடானி அரசாங்கம் வசதி குறைந்த மக்களின் நலன்களில் அதிக அக்கறை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த மாநில அரசாங்கம் அனைத்து இனங்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்கி வருகிறது.
இந்த நிலையில் நெகிரி செம்பிலான் மாநில மக்கள் நடப்பு அரசாங்கத்திற்கு தொடர்ந்து தங்களின் பிளவுபடாத ஆதரவை வழங்கி வர வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் நெகிரி செம்பிலான் மாநில ஆட்சி குழு உறுப்பினரும் நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான ஜ. அருள் குமார், சிரம்பான் மாநகர் மன்ற உறுப்பினர் ஜாமிலா, சிரம்பான் ஜெயா சட்டமன்ற தொகுதி அலுவலக நிதி அதிகாரி நான்சி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


