
சிரம்பான் டிச 28
இந்நாட்டில் இந்திய சமூகத்தினர் எதை நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வை காண மடானி அரசாங்கத்தில் உள்ள இந்திய அமைச்சர் மற்றும் துணையமைச்சர்கள் வட்டமேசை பேச்சு வார்த்தைகளை நடத்த வேண்டும் என பாக்காத்தான் ஹராப்பன் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி. குணசேகரன் வலியுறுத்தினார்.
மடானி அரசாங்கத்தில் உள்ள 1 அமைச்சர் மற்றும் 3 துணையமைச்சர்கள் ஒன்றாக அமர்ந்து அவ்வப்போது பேச்சு வார்த்தைகளை நடத்தினால் மட்டுமே, இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட முடியும் என்றார் அவர்.
இந்த விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், ஜசெக பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோனி லோக், இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, தேசிய ஒற்றுமை துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி, பிரதமர் இலாகா (சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் மற்றும் தொழில் முனைவர், கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் ஆகியோருக்கு தாம் விரைவில் கடிதம் எழுதப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இவர்கள் இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் எதிர் நோக்கும் பிரச்சனைகள் குறித்து ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும்.
ஒரு கை தட்டினால் ஓசை எழாது என்பது போல், இவர்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்திய சமூகத்திற்கு நல்ல தீர்வு பிறக்கும் என அவர் சொன்னார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாட்டின் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு பிறகு இந்திய சமூகத்தை 4 முழு அமைச்சர்கள் மற்றும் 1 துணையமச்சர் பிரதிநிதித்தனர்.
ஆனால் இவர்கள் வட்டமேசை பேச்சு வார்த்தைகளை நடத்தியதே கிடையாத என்பதுதான் உண்மை.
அந்தக் காலகட்டத்தில் 4 இந்திய அமைச்சர்கள் இருந்தும் இந்திய சமூகத்தின் பிரச்சனைகளுக்கு ஒரு முறையான தீர்வு காணப்படவில்லை என குணசேகரன் குறிப்பிட்டார்.
இந்த நிலை தொடர்ந்தால் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் இந்திய சமூகத்தினர் நடப்பா அரசாங்கத்தை நிராகரிக்கும் நிலை ஏற்படலாம்.
இதற்கு எடுத்துக்காட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த சுங்கை பாக்காப் இடைத்தேர்தல் என அவர் சுட்டிக் காட்டினார்.


