
கோலாலம்பூர் டிச 17
சட்டத் தொழில் தகுதி வாரியத்தின் கணக்குகள் வருடாந்திரம் தணிக்கை செய்யப்படும் என பிரதமர் இலாக்கா
( சட்டம் மற்றும் நீதி சார் சீர்திருத்தம்) துணையமைச்சர் எம். குலசேகரன் கூறினார்.
இதற்கு ஏதுவாக கடந்த வாரம் 1976 ஆம் ஆண்டு சட்டத் தொழில் வாரியத்தின் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
தனியார் அமைப்புகளில் வங்கி கணக்குகளில் வெளிப்படுத்தன்மை இருக்க வேண்டும் என்ற நோக்கில் அரசாங்கம் இந்த முடிவை செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் சட்டத் தொழில் தகுதி வாரியத்தின் வங்கி கணக்குகள் தணிக்கை செய்யப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தற்போது இந்த வாரியத்திடம் வெ 55.2 மில்லியன் நிதி இருப்பதாக அவர் தெரிவித்தார்.
கடந்த 7 ஆண்டுகளில் இந்த வாரியம் நடவடிக்கை செலவினங்களுக்காக வெ 20.5 பில்லியன் செலவிட்டுள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் குலசேகரன் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.
கடந்த ஆண்டு மட்டும் இந்த வாரியம் வெ 3.89 பில்லியன் செலவிட்டுள்ளது.
சிஎல்பி தேர்வில் தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாதவர்களின் புள்ளி விவரங்கள் தங்களுக்கு கவலை அளிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
வெளிப்படை தன்மையை உறுதிப்படுத்த இந்த வாரியத்தின் நடவடிக்கைகளை அரசாங்கம் அணுக்கமாக கவனித்து வரும் என்றார் அவர்.
2024 ஆம் ஆண்டில் 1,500 சட்டக் கல்வி பட்டதாரிகள் வருடாந்திர சிஎல்பி தேர்வில் அமர்ந்தனர். இவற்றில் 450 பட்டதாரிகள் 5 வினா தாள்களில் 1 க்கும் மேற்பட்ட வினா தாள்களில் மீண்டும் அமர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


