
கோலாலம்பூர் நவ 23
கோலாலம்பூரில் உலகின் முதலாவது மலிவு விலை கட்டண விமான பயண மையத்தை நிறுவ ஏர் ஆசியா நோக்கம் கொண்டிருப்பதாக அதன் ஸ்தாபகர் டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.
உலகளாவிய நகரங்களை இணைக்க துபாய் மற்றும் கத்தாரின் வெற்றியை அவர் சுட்டிக் காட்டினார்.
மலேசிய தலைநகரான கோலாலம்பூர் மற்றும் தாய்லாந்து தலைநகரான பேங்காக் வழி பயணிகளை இணைக்க உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா திட்டம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
‘நான் என்ன கூற விரும்புகிறேன் என்றால், துபாய் மற்றும் கத்தாரை போல் உலகில் முதல்முறையாக கோலாலம்பூர் மற்றும் பேங்காக்கில் ஒரு மலிவு கட்டண விமான மையம் அமைக்கப்பட வேண்டும்’ என புளும்பெர்க் ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டார்.
பேங்காக்கில் இப்படி ஒரு விமான போக்குவரத்து மையம் இருக்கிறது, அதே போல் சிங்கப்பூரிலும் உள்ளது. ஆனால் இவை அனைத்தும் விலை மதிப்பிலான விமான மையங்கள் ஆகும். இவை எதுவும் மலிவு கட்டண விமான மையங்கள் அல்ல என அவர் சுட்டி காட்டினார்.
ஒன்றரை மணி நேரம் மற்றும் 6 மணி நேர விமான பயணத்தில் தான் ஏர் ஆசியா கவனத்தை செலுத்தி வருவதாக அவர் தெரிவித்தார்.
கோவிட் 19 தாக்கத்தின் போது பின்னடைவு அடைந்த போதிலும், இப்பொழுது முதல் 2025 ஆம் ஆண்டிற்குள் தமது நிறுவனம் மீட்சி நிலை அடைந்து விடும். மேலும் 2026 ஆம் ஆண்டு விமான போக்குவரத்து துறைக்கு ஒரு பொன்னான ஆண்டு என அவர் சுட்டிக் காட்டினார்.
‘5 ஆண்டுகள் நாம் நரக வாழ்க்கையை அனுபவித்தோம். இப்பொழுது மீட்சி நிலைக்கு திரும்பி வெற்றி நடை போடுகிறோம்’ என அவர் கோடிக்காட்டினார்.
கோவிட் 19 தாக்க காலத்தின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட 2,600 பணியாளர்களை ஏர் ஆசியா மீண்டும் அமர்த்திக் கொண்டது. தற்போது 23,000 பணியாளர்கள் முழுமையாக வேலைக்கு அமர்த்தப்பட்டு விட்டனர் என டான்ஸ்ரீ டோனி பெருமிதம் கொண்டார்.


