Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

என்னுடைய சின்ன வயசு ஒரு நாள் தீபாவளி!

கூலிம், பி.எம்.ஆர்.தோட்டத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு, சின்ன வயசு தீபாவளி என்றாலே அதன் எதிர்ப்பார்ப்புகளால் அலாதிக் கொண்டாட்டம். புதிய சட்டை சிலுவார் தைக்க ஆர்டர் கொடுக்கும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகைக்கான நாளை எண்ணத்தொடங்கி விடுவேன். தோட்டத்தில் இருந்த வங்சா கடைகளில் ஒன்றின் உரிமையாளர், அக்காய் என்பவர் கடையின் ஒரு பகுதியில், துணிகளைத் தைத்துக் கொடுக்கும் தொழிலையும் செய்து வந்தார். தீபாவளி வந்துவிட்டால் தான் அவருக்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைக்கும். வருசத்தில் ஒரு முறை தான் எனக்கும் என் அண்ணன்களுக்கும் ஒரு ஜோடி புதிய சட்டை சிலுவார் கிடைக்கும். அதுவும் அனைவருக்கும் ஒரு மாதிரியானக் கலர்: அரைக்கை சட்டை, அரைக்கால் சிலுவார்; என அப்பா முடிவு செய்வார். சட்டை சிலுவார் தைக்கக் கொடுத்த நாளிலிருந்து அவை எப்போது கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும். தோட்டத்து ஆலைக்கரையில் (ரப்பர் தொழிற்சாலை) வேலை முடிந்து வீடு திரும்பும் அப்பாவின் கைகளில் ஏதேனும் பை இருக்கிறதா என்று நோட்டம் விடுவதை தீபாவளி சமயங்களில் ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தேன். தோட்டத்து தமிழ்ப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலக் கட்டமானதால், சக வகுப்பு நண்பர்களிடம் தீபாவளி பற்றிய உரையாடல்களே அதிகமாக இருக்கும். அதிலும் புதிய சிலுவார் சட்டை தைக்க ஆர்டர் கொடுத்துவிட்ட செய்தியை எல்லா மாணவ நண்பர்களிடமும் பலமுறை பகிர்ந்துக் கொள்ளும் போது மனதில் ஏற்படும் சந்தோசத்திற்கு அளவே இருக்காது. அதுவும் சட்டை சிலுவாரின் கலர் அதன் ஸ்டைல் பற்றிப்பேசும் போது, அகா மனம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் லைத்துப்போகும் இப்படியாக நாட்கள் மெதுவாக நகர்ந்துக்கொண்டு இருக்கும் வேளையில், ஒரு நாள் வேலை முடிந்து திரும்பும் வழியில் கடைக்காரர் தைத்துக்கொடுத்த துணிகளுடன் வீடு வந்த அப்பாவை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து வரவேற்று அவர் கைகளில் பிடித்திருந்த பைகளை வாங்கி வீட்டில் இருந்த வயதான வர்ணம் இழந்த துணி அலமாரிக் கண்ணாடியில் முன் நின்று புதிய சட்டை சிலுவாரை போட்டுப் பார்த்து அம்மா அப்பாவிடம் காட்டி அவர்களும் ‘அய்செ. ரொம்ப நல்ல இருக்கு என்று சொல்லும் போது அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. தீபாவளிப் பண்டிகை வருவதற்கு முன்னாலேயே புதிய சட்டை சிலுவாரை பல தடவை போட்டுப் பார்த்த அனுபவம் எனக்கு அதிகமாகவே இருந்தது. இப்படியாக மகிழ்ச்சி கலைக்கட்டிக்கொண்டு இருக்கும் போது, ‘கித்தா மரம் சீவும் வேலை பார்த்த அம்மா, மாலை வேளைகளில் பக்கத்து வீடுகளில் குடியிருந்த பாட்டி, அக்கா போன்றவர்களின் உதவியோடு முருக்கு. ஓமப்பொடி, பொரிவிலாங்காய் (கல்லுருண்டை), அச்சுமுறுக்கு போன்ற பலகாரங்களோடு இன்னும் அதிகமான பலகாரங்களைச் கொஞ்சம் கொஞ்சமாக செய்து முடிப்பார் பலகாரங்கள் செய்யும் போதே, அதில் ரெண்டு மூன்றினை அணிந்திருக்கும் சிலுவார் போக்கெட்டில் போட்டுக்கொண்டு ஓடிப்போய் ருசிப் பார்ப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கும். தீபாவளி பண்டிகைக்கு முதல் நாள், இயற்கை எய்திய தாத்தா பாட்டிகளுக்கு படையல் வைப்பது எங்கள் வீட்டில் ஒரு முக்கிய நிகழ்வாக இருக்கும். அந்நிகழ்வுக்கு தோட்டத்தில் வாழ்ந்த எங்கள் மாமன்மார்கள், அத்தைமார்கள் வந்து கலந்துக்கொண்டு தாத்தா பாட்டிகளுக்கு படையலை எடுத்துவைத்து வணங்கி அவர்களின் அசீர்வாதத்தையும், வாழ்த்துகளையும் பெற்று சிறிய நலன் விசாரிப்புகளுக்குப் பிறகு, பந்தி ஆரம்பமாகும். வரிசையாக வீட்டின் ‘ஹாலில்’ அனைவரும் அமர்ந்தவுடன் முதலில் படையல் சோற்றினை அம்மா அனைவருக்கும் பரிமாறுவார். தொடர்ந்து சமைத்து வைத்திருக்கும் அனைத்து விதமான பதார்த்தங்களையும் அம்மா அனைவருக்கும் பரிமாறுவர். நல்ல நல்ல உரையாடல்களுக்கு மத்தியில் அனைவரும் அம்மாவின் சமையலை ஒரு கை பார்ப்போம். அதன் பிறகு, பெரிய மாமா, சின்ன மாமா வாங்கி வந்திருக்கும் பட்டாசு மத்தாப்பு போன்றவற்றைக் கொளுத்தி மகிழ்வோம். பட்டாசு பாதி வெடிக்காது மத்தாப்பு சுர் என்ற பொறிகளை உதிர்ந்து தள்ளிவிட்டு கம்மென்று இருக்கும் அனைத்தும் சீக்கிரமே தீர்ந்து போகும். அந்த பரவசமான நிகழ்வுகளோடு, படுத்த மாத்திரத்தில் பொழுதும் விடிந்து விடும். அடுப்பங்கரையில் கொஞ்சம் நேரம் குளிர் காய்ந்த பிறகு அப்பா எண்ணெய் தேய்க்க, அம்மா சீயக்காய் தேய்த்த பிறகு வீட்டிற்கு அருகாமையில் இருந்த பொது குளிப்பறையில் குளிக்க ஓடுவோம். அங்கே பக்கத்து வீட்டிக்காரர்களும் குளித்துக் கொண்டிருப்பார்கள். ஆளுக்கு ஒரு பக்கமாக நின்றுக்கொண்டு வாளியில் பிடித்து வைத்திருக்கும் தண்ணியை மொண்டு மொண்டு குளித்து அந்தக் குளிரிலும் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி பொங்க வீட்டிற்கு திரும்புவோம். அப்பா தைத்துக் கொடுத்த புதிய சட்டை சிலுவாரை முதல் முறையாக அணிவது போல அணிந்துக்கொண்டு மகிழ்ச்சி பொங்க சிறப்பு தீபாவளி இறை வழிபாட்டில் அனைவரும் கலந்துக்கொள்வோம். தீபாவளிக் காலைப் பசியாறை உண்மையிலேயே அதிகச் சுவையுடன் இருக்கும். அக்காலக்கட்டத்தில் அடிக்கடி கோழி, ஆட்டுக்கறியோடு இட்டி தோசை, வடை போன்றவை தினந்தோறும் உண்பதற்கு வசதியில்லாத காரணத்தால் ஒரு வேளை அந்தக் காலை உணவு அதிகச் சுவைக்கொண்டதாக இருந்திருக்குமோ அல்லது அக்காலத்தில் அம்மா சமைத்த உணவின் ருசியாகக்கூட இருக்கலாம் அல்லவா? புதிய சட்டை சிலுவார் மற்றும் புதிய சப்பாத்து போட்டுக்கொண்டு, அக்கம் பக்கத்தில் வசித்த சீன மற்றும் மலாய்க்கார குடும்ப நண்பர்களுக்கு அம்மா மங்கில் போட்டுக் கொடுக்கும் பலகாரங்களை மன உற்சாகத்துடன் கொண்டு போய் கொடுப்பது வழக்கம் அவர்களில் சிலர் பலகாரக மங்கினை வாங்கிக்கொண்டு மாற்றாக கொஞ்சம் சீனி வைத்துக் கொடுப்பார்கள். இன்னும் சிலர் இருபது அல்லது ஐம்பது காசு வைத்துக்கொடுத்து ‘ஒ அவா பாஞ்ஞ சந்திக்காசி தாவ் அம்மா பாஞ்ஞ தெரிமா காசே என்றும் சொல்வார்கள். அனைவருக்கும் நன்றியினைக்கூறிவிட்டு மகிழ்ச்சி பொங்க வீட்டிற்கு வந்து அம்மாவிடம் சீனிவுடன் மங்குகளை மட்டும் கொடுத்துவிட்டு பெற்ற சில்லரைகள் புதிய சிலுவார் பைக்குள் மறைந்துக்கொள்ளும் இப்படியாக கடந்துக்கொண்டிருக்கும் தீபாவளி பண்டிகையன்று, கூலிம் தியேட்டர்களில் திரையிடப்படும் திரைப்படங்களை பகல் முதல் இரவு வரை கண்டு கழிப்பது கட்டாயமான ஒன்றாகும். அக்காலக்கட்டத்தில் பெரும்பாலும் மக்கள் திலகம் எம் ஜி. ஆர். மற்றும் சிவாஜி கணேசன் நடித்த படங்கள் திரையிடப்படும். அதனால் கூட்ட நெரிசல் அப்படித்தான் இருக்கும். சமயங்களில் பிலேக் கில் டிக்கேட் வாங்கிப் பார்த்த அனுபவமும் உண்டு என்றால் அது மிகையில்லை. அந்தக்காலக்கட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஒரு நாள் மட்டும் தீபாவளிக்காக சம்பளத்துடன் விடுமுறை கொடுக்கப்பட்டது. அதனால், தீபாவளிக்கு மறுநாள் அனைவரும் தத்தம் வேலைகளைப்பார்க்க புறப்பட்டுவிடுவதால், இனிமையான எதிர்ப்பார்ப்புக்களோடு தொடங்கிய ஒரு நாள் தீபாவளி இத்துடன் முடிவடைகின்றது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் லோகநாதன் வீராசாமி ரவாங், சிலாங்கூர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular