
கோலாலம்பூர், நவ 13
சுயதொழில் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டச் சட்டம் 2017 (சட்டம் 800) ஆகியவற்றிற்கான திருத்த மசோதாக்கள் வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளன.
சட்டம் 789-இன் கீழ் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் ‘பயணிகள் பாதுகாப்புத் திட்டத்தையும்’, சட்டம் 800-இன் கீழ் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் ‘மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை’ திட்டத்தையும் உள்ளடக்கியிருக்கும் என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
எல்லை தாண்டி வேலைக்குச் சென்று வரும் மலேசியர்கள், குறிப்பாகத் தினமும் சிங்கப்பூருக்குப் பயணம் செய்யும் 400,000-க்கும் மேற்பட்ட மலேசியர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதே சட்டம் 789-இன் திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் கூறினார்.
“டிசம்பர் மாத இறுதியில், வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்று வரும் மலேசியர்களுக்குப் பயனளிக்கும் வகையிலான பயணிகள் பாதுகாப்புத் திட்டம் தொடர்பான சட்டம் 789-இன் திருத்தங்களை நான் நேரடியாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வேன்,” என்று அவர் நேற்று முன்தினம் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (பெர்கெசோ) 2026-ஆம் ஆண்டிற்கான ஐ-லிண்டுங் ஊடக விருதுகள் – ஊடகவியலாளர்களுடனான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் மனிதவளத் துணை அமைச்சர் டத்தோ கைருல் பிர்தௌஸ் அக்பர் கான், பெர்கெசோ வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சுபஹான் கமால், பெர்கெசோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் முகமது அஸ்மான் அசிஸ் முகமது, மலேசிய தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைமை ஆசிரியர் அருள் ராஜூ துரைராஜ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
மேலும், சட்டம் 800-இன் திருத்தங்கள் மூலம் அறிமுகப்படுத்தப்படவுள்ள மகப்பேறு விடுப்புக்குப் பிந்தைய உதவித்தொகை திட்டத்தின் வாயிலாக 132,000-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக ரமணன் குறிப்பிட்டார்.
மக்களின் நலனைப் பாதுகாப்பதற்கும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும் மனிதவள அமைச்சின் ஊடாக அரசாங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த இரு சட்டத் திருத்தங்களும் அமைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த இரு திட்டங்கள் குறித்த தகவல்களைப் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க ஊடகங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், அதன் மூலம் அதிகமான மக்கள் இத்திட்டங்களைப் பற்றி அறிந்து, புரிந்துகொண்டு பயன்பெற முடியும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


