Friday, November 13, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

அந்தோணி லோக்கின் பதவி விலகல் பேரிழப்பாகும் – ரமணன்!

கோலாலம்பூர், நவ 13
போக்குவரத்து அமைச்சராகப் பதவி வகித்த அந்தோணி லோக்கின் பதவி விலகல் நாட்டிற்குப் பேரிழப்பாகும் என மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அந்தோணி லோக் கொள்கைப் பிடிப்பும் உறுதியான நிலைப்பாடும் கொண்டவர் எனக் குறிப்பிட்ட ரமானன், அவருடன் அமைச்சரவையில் பணியாற்றியதை நினைவுகூர்ந்தார்.

“நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். அவர் எனது நல்ல நண்பர் மட்டுமின்றி, அமைச்சரவை சகாவும் ஆவார். அவரை நான் இழக்கப் போகிறேன்.

“இருப்பினும், இது அவருடைய தனிப்பட்ட முடிவும் நிலைப்பாடும் ஆகும். அவர் கொள்கைப் பிடிப்புள்ள மனிதர். அவருடைய முடிவை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருடைய பதவி விலகல் உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்,” என்று அவர் தெரிவித்தார்.

கோலாலம்பூரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (பெர்கேசோ) 2026ஆம் ஆண்டு ஊடக விருது விழாவின் இடையே செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

இதனிடையே, அமைச்சரவை மாற்றம் தொடர்பான எந்தவொரு முடிவும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் ரமானன் குறிப்பிட்டார்.

கோலாலம்பூர் உயர் நீதிமன்றம், எஸ்.ஆர்.சி. இண்டர்நேஷனல் வழக்கில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கின் எஞ்சிய சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க அனுமதித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அந்தோணி லோக் நேற்று முன்தினம் உடனடியாகப் போக்குவரத்து அமைச்சர் பதவியிலிருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, அந்தோணி லோக்கிற்குப் பதிலாக புதிய அமைச்சரை நியமிப்பது குறித்துப் பேசுவது தற்போதைக்கு முன்கூட்டிய செயலாகும் என ஜசெக தெரிவித்துள்ளது. அதேவேளை, அமைச்சரவை மாற்றம் குறித்து விவாதிப்பதற்கு இது மிகவும் ஆரம்பக் கட்டம் எனப் பிரதமர் அன்வாரும் கூறியிருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular