Monday, October 5, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கல்விக்கு கரம் கொடுக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயம்!

டத்தோ கே. எஸ். பாலகிருஷ்ணன் அவர்களின் தலைமையில் சிறப்பாக இயங்கி வரும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் சார்பில், தொடர்ந்து 8-ஆம் ஆண்டாக கல்வி நிதி வழங்கும் சிறப்புமிகு நிகழ்வு ஆலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கல்வியே ஒரு தனிமனிதனின் முன்னேற்றத்திற்கும், ஒரு சமூகத்தின் உயர்விற்கும் அடித்தளம் என்ற உயரிய நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், ஸ்கூடாய் வட்டாரத்தைச் சேர்ந்த உயர்கல்வியைத் தொடரவுள்ள 41 மாணவர்களுக்கு அவர்களின் கல்விப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஜொகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பா. பன்னீர்செல்வம் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, மாணவர்களை வாழ்த்தியதுடன், ஆலயம் வழங்கிய கல்வி நிதியையும் மாணவர்களுக்கு வழங்கி சிறப்பித்தார்.

நிகழ்வில் தலைமையுரையாற்றிய ஆலயத் தலைவர் டத்தோ கே. எஸ். பாலகிருஷ்ணன்,
“கல்வியே ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை உருவாக்கும் வலிமையான கருவி” என்பதை வலியுறுத்தினார். மேலும், உயர்கல்வியைத் தொடங்கும் மாணவர்களுக்கு ஏற்படும் ஆரம்பகட்ட கல்விச் செலவினங்களில் இந்நிதியுதவி ஒரு சிறிய துணையாக அமைந்து, அவர்களின் கல்விப் பயணத்திற்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும் எனக் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றி, மாணவர்களின் சீரிய முன்னேற்றத்திற்கும் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் சிறப்பான பங்களிப்பை வழங்கிய நான்கு முன்னாள் தலைமையாசிரியர்களான திரு. சேதுபதி, திரு. நடராஜன், திரு. பூபாலன் மற்றும் திரு. வடிவேலு ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பிக்கப்பட்டனர். அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி, அவர்களின் கல்விச் சேவையைப் பாராட்டி கௌரவிக்கப்பட்டது.

மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஆலயம் தொடர்ந்து வழங்கி வரும் இத்தகைய ஆதரவு, “ஆலயம் என்பது ஆன்மிகப் பணிக்கான இடம் மட்டுமல்ல; சமூக முன்னேற்றத்திற்கும் மனிதநேயப் பணிகளுக்கும் கரம் கொடுக்கும் தளமாகவும் விளங்க வேண்டும்” என்ற உயரிய சிந்தனையை வெளிப்படுத்துவதாக அமைந்தது.

இந்நிகழ்வில் ஜொகூர் மாநில ம.இ.கா. துணைத்தலைவர் திரு. நிலாராஜா மற்றும் அவர்தம் குழுவினர், ம.இ.கா. தொகுதித் தலைவர்கள், சுற்றுவட்டாரப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆலய நிர்வாக உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட சுமார் 150 பேர் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர்.

கல்விக்குக் கரம் கொடுத்து, மாணவர்களின் கனவுகளுக்கு சிறகளித்து, எதிர்காலத் தலைமுறையின் உயர்வுக்கு உறுதுணையாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய நிர்வாகத்திற்கு மனமார்ந்த நன்றுயினை மாணவர்களும் பெற்றோர்களும் தெரிவித்துக் கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular