
கேரளா, நவ 20
தேசிய ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ், கேரள மாநில முஸ்லிம் இளைஞர் லீக் தலைவர் ஸ்ரீ சையத் முனவ்வர் அலி ஷிஹாப் தங்களுடன் மத சகிப்புத்தன்மை மற்றும் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை வலுப்படுத்துவது தொடர்பாகக் கலந்துரையாடினார்.
இந்தச் சந்திப்பு, இந்தியாவின் கேரள மாநிலம் பனக்காட்டில் அமைந்துள்ள முனவ்வர் அலியின் இல்லத்தில் நடைபெற்றது. அவரது அழைப்பை ஏற்று அங்கு சென்ற யுனேஸ்வரன், அவருடன் அரசியல், சமூக மேம்பாடு மற்றும் மதங்களுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையின் அவசியம் குறித்தும் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார்.
இந்தச் சந்திப்பு குறித்து கருத்துத் தெரிவித்தயுனேஸ்வரன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (IUML) செயலாளராகவும் விளங்கும் முனவ்வர் அலி, சமூக, அரசியல் மற்றும் மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களில் தொடர்ந்து முக்கியப் பங்காற்றி வரும் மதிப்புமிக்க தலைவர்களில் ஒருவர் எனக் குறிப்பிட்டார்.
மேலும், தனது தந்தை மற்றும் குடும்பத்தின் முந்தைய தலைமுறையினரிடமிருந்து வந்த தலைமைத்துவப் பாரம்பரியத்தையும் சமூக சேவையையும் முனவ்வர் அலி தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் எல்லைகளைக் கடந்து அர்த்தமுள்ள நட்புறவுகளையும் உறவுகளையும் வளர்த்துக்கொள்வது அவசியம் எனத் தாம் நம்புவதாக யுனேஸ்வரன் கூறினார்.
“அரசியல் கருத்து வேறுபாடுகள் அர்த்தமுள்ள உரையாடல்களை மேற்கொள்வதற்கும், ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கும், பொதுவான நலன்களுக்காக இணைந்து செயல்படுவதற்கும் தடையாக இருக்கக்கூடாது” என அவர் வலியுறுத்தினார்.
தமக்கு அன்பான வரவேற்பளித்த முனவ்வர் அலிக்கு நன்றி தெரிவித்ததுடன், கருத்துப் பரிமாற்றத்திற்கும் நட்புறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் கிடைத்த வாய்ப்பைப் பாராட்டுவதாகவும் யூனேஸ்வரன் குறிப்பிட்டார்.
அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நட்புறவை வளர்ப்பதும், அர்த்தமுள்ள உரையாடல்கள் மூலம் சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்கு வழிவகுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


