Thursday, November 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சரவாக் மாநிலத்துடனான மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வம்!

கூச்சிங், நவ 19

சுற்றுலா, வர்த்தகம், முதலீடு, உயர்தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சரவாக் மாநிலத்துடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்தி, இருதரப்பு மூலோபாயக் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு சரவாக்கில் புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையர் சோம்நாத் கோஷ் (Somnath Ghosh), சரவாக் மாநிலத்தில் இந்தியர்கள் வேலைவாய்ப்புகளைப் பெறவும், முதலீடுகளை மேற்கொள்ளவும், வர்த்தக வாய்ப்புகளை ஆராயவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்திய சுற்றுலாப் பயணிகளும் சரவாக்கை ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகக் கருதி வருகை தரலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், தற்போது உருவாக்கப்பட்டு வரும் தொழில்துறை பூங்காக்கள் மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களில் இந்திய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகளையும் ஆராயலாம் என அவர் கூறினார்.

“சரவாக் மாநிலத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு இந்தியா விரும்புகிறது. எனது பதவிக்காலம் முழுவதும் மாநில நிர்வாகத்துடனும் மக்களுடனும் இணைந்து பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவேன் என நம்புகிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.

சரவாக் மாநிலத் தலைவர் துன் பெஹின் ஸ்ரீ டாக்டர் வான் ஜுனைடி துவாங்கு ஜாஃபாரை (Tun Pehin Sri Dr Wan Junaidi Tuanku Jaafar), கூச்சிங்கில் உள்ள அஸ்தானா நெகிரியில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியா மற்றும் சரவாக் இடையே நீண்டகால நட்புறவு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட கோஷ், சரவாக்கில் பல தலைமுறைகளாக இந்தியச் சமூகம் வாழ்ந்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்தச் சந்திப்பின்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த 2026ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் வாரத்தில் மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையராகப் பொறுப்பேற்ற பின்னர், மலேசிய மாநிலங்களுக்கு மேற்கொண்ட ஆரம்பகட்டப் பயணங்களில் சரவாக் பயணமும் ஒன்றாகும் என அவர் கூறினார்.

மேலும், தெற்காசிய அனைத்துலக மகளிர் பேரவை (South Asian International Women’s Assembly – SIWA) 2026 நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவும் அவர் சரவாக் வந்திருந்தார். அந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் அவர் உரையாற்றினார்.

இந்தியா – சரவாக் இடையிலான இந்த ஒத்துழைப்பு விரிவாக்கம், எதிர்காலத்தில் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய முன்னேற்றங்களுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular