Sunday, October 4, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

கொரியாவில் முதல் பன்னாட்டு இந்தியா–தமிழ்–கொரியா ஆய்வு மாநாடு: 205ஆவது திருவள்ளுவர் சிலை திறப்பு

தென்கொரிய மண்ணில் முதல்முறையாகத் திருவள்ளுவர் சிலை திறக்கப்படவுள்ளது. கொரிய தமிழ்ச் சங்கம் நடத்தும் “முதலாம் பன்னாட்டு இந்தியா–தமிழ்–கொரியா ஆய்வு மாநாடு 2026”, தமிழ்க் கலை இலக்கியத் திருவிழா மற்றும் 3ஆவது கொரிய தமிழ்ச் சங்க விருதுகள் வழங்கும் விழா ஆகியவை அக்டோபர் 31, 2026 அன்று டேஜான் அருகில் நடைபெறுகின்றன. சென்னை கவிஞர் முனைவர் ஆலந்தூர் கோ. மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் (இயக்குநர் முனைவர் மோ. பாட்டழகன்), வி.ஜி.பி. உலகத் தமிழ்ச் சங்கம் ஆகியவை இவ்விழாவை இணைந்து நடத்துகின்றன.

205ஆவது திருவள்ளுவர் சிலையாக, வி.ஜி.பி. குழுமத் தலைவர் திரு. வி.ஜி.பி. சந்தோஷம் அன்பளிக்கும் சிலை கொரிய தமிழ்ச் சங்க வளாகத்தில் நிறுவப்படுகிறது. அவருக்குச் சங்கத்தின் உயரிய “உலகத் தமிழன் விருது” வழங்கப்படுகிறது.

இந்தியா, இலங்கை, கனடா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, பிஜித் தீவுகள், பப்புவா நியூ கினி ஆகிய நாடுகளிலிருந்து தமிழறிஞர்களும் ஆய்வாளர்களும் இம்மாநாட்டில் பங்கேற்கின்றனர். அவர்களின் ஆய்வுக் கட்டுரைகள் நேரிலும் இணைய வழியிலும் வாசிக்கப்படும். அனைத்துக் கட்டுரைகளும் விழா மலரில் இடம்பெறும்; தேர்ந்தெடுக்கப்பட்டவை ISBN எண்ணுடன் நூலாக வெளியிடப்படும்.

தமிழர்–கொரியர் தொடர்பு ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலானது. பண்டைய தமிழர்களின் கடல்வழி வணிகமும், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் போன்ற பௌத்த மையங்களிலிருந்து பரவிய பௌத்த நெறியும் இவ்விரு மக்களை இணைத்தன. அம்மா–엄마, அப்பா–아빠, நான்–나 போன்ற சொல் ஒற்றுமைகளையும் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கி.பி. 48இல் இந்தியாவிலிருந்து கடல்வழி வந்து கயா நாட்டு மன்னர் கிம் சுரோவை மணந்த அரசி ஹியோ ஹ்வாங்-ஓக் பற்றி கொரிய வரலாற்று நூலான “சம்குக் யுசா” குறிப்பிடுகிறது. அவர் தமிழகத்தைச் சேர்ந்த இளவரசி “செம்பவளம்” என முனைவர் நா. கண்ணன் உள்ளிட்ட தமிழறிஞர்கள் முன்வைக்கின்றனர். கிம்ஹே கிம், கிம்ஹே ஹியோ குடிவழியினர் இன்றும் தங்களை அரசியின் வழித்தோன்றல்களாகப் போற்றுகின்றனர். இதன் நினைவாக, கிம்ஹே நகரிலுள்ள அரசியின் நினைவிடத்திற்கு உலகத் தமிழர்கள் பங்கேற்கும் மரபு நடைப்பயணமும் மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

இதுகுறித்து கொரிய தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் செ. அரவிந்தராஜா கூறுகையில், “அரசி செம்பவளம் இணைத்த கொரிய மண்ணில் திருவள்ளுவர் சிலை நிறுவப்படுவது ஈராயிரம் ஆண்டு உறவின் புதிய அத்தியாயம். இங்கு வளரும் தமிழ்க் குழந்தைகளுக்கு வேர்களை நினைவூட்டும் சின்னமாகவும், கொரிய மக்களுக்குத் திருக்குறளை அறிமுகப்படுத்தும் பண்பாட்டுப் பாலமாகவும் இச்சிலை விளங்கும்” என்றார்.

தமிழ்–கொரிய மொழியியல், பண்பாடு, பண்டைய கடல்வழி வணிகம் குறித்த ஆய்வுகள் இம்மாநாட்டின் மூலம் ஆவணப்படுத்தப்படும் எனச் சங்கச் செயலாளர் முனைவர் செலஸ்டின் ராஜா தெரிவித்தார்.

இந்தியாவில் முனைவர் மோ. பாட்டழகனும், கொரியாவில் துணைத் தலைவர் திருமிகு. தெ. விஜயலெட்சுமி, பொருளாளர் முனைவர் ந. முத்துசாமி, இணைப் பொருளாளர் முனைவர் பீ. ஜெரோம் ஆகியோரும் விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைத்து வருகின்றனர்.

தொடர்புக்கு: ktsawards@gmail.com | https://www.koreatamilsangam.com/

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular