Thursday, August 20, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

3டி துறையில் மலேசியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட் போதிலும் 352 பேர் மட்டுமே விண்ணப்பம்: அமைச்சர் ரமணன் ராமகிருஷ்ணன் தகவல்.

புத்ராஜெயா, ஆக 20
நாட்டின் கடின உழைப்பு, ஆபத்து மற்றும் தூய்மை பேணல் சார்ந்த ‘3டி’ துறை வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிப்பதற்கு முன்பாக, எப்போதும் மலேசியர்களுக்கே முதன்மை முன்னுரிமை வழங்கப்படும் என்று அரசாங்கம் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

எனினும், ‘மைபியூச்சர்ஜோப்ஸ்’ (MYFutureJobs) வேலைவாய்ப்பு தளத்தின் வாயிலாக ஆயிரக்கணக்கான 3டி துறை காலிப் பணியிடங்கள் விளம்பரப்படுத்தப்பட்ட போதிலும், இதுவரை வெறும் 352 மலேசியர்கள் மட்டுமே அதற்கு விண்ணப்பித்துள்ளதாக மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இன்று புத்ராஜெயா, மெனாரா பெர்கேசோவில் நடைபெற்ற ‘ஆகஸ்ட் மாத கெசுமா மாதாந்திர கூட்டம் மற்றும் சுதந்திர தின மாதக் கொண்டாட்டத்தில்’ கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இத்துறைக்கான காலிப் பணியிடங்களுக்கும் உள்ளூர்வாசிகளின் வரவேற்பிற்கும் இடையே இன்னமும் பெருமளவிலான இடைவெளி நிலவி வருவதைச் சுட்டிக்காட்டினார்.

“மைபியூச்சர்ஜோப்ஸ் தளத்தில் வேலைவாய்ப்புகள் முறைப்படி அறிவிக்கப்பட்டு, மலேசியர்கள் எவரும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முன்வராத பட்சத்தில் மட்டுமே, அவை வெளிநாட்டு ஊழியர்களுக்கோ அல்லது ஏனைய தரப்பினருக்கோ திறந்துவிடப்படும்,” என்று அவர் கூறினார்.

3டி துறைக்காகக் கொண்டுவரப்படும் 15,000 வெளிநாட்டு ஊழியர்களின் வருகையைத் தற்காலிகமாக நிறுத்திவைத்து, இந்நாட்டில் வசிக்கும் குடியுரிமையற்ற மக்களுக்கு அவ்வேலைவாய்ப்புகளை வழங்க வேண்டும் என மலேசிய சர்வதேச சமூகப் பாதுகாப்பு அமைப்பு (MHO) கோரிக்கை விடுத்திருந்தது.

பல தலைமுறைகளாக மலேசியாவிலேயே பிறந்து வளர்ந்த குடியுரிமையற்ற மக்களுக்கு இத்தகைய வாய்ப்புகளை வழங்குவது நியாயமானது என வலியுறுத்தி, அவ்வமைப்பு பிரதமரின் அலுவலகத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் அமைச்சரின் இந்த விளக்கம் வெளியாகியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டத்தில் தொழிலாளர் நலன் சார்ந்த பல முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அமைச்சர், வரவிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ‘பயணிகள் திட்டம்’ மற்றும் ‘பிரசவ கால நலத்திட்டம்’ ஆகிய இரு முக்கிய சட்ட வரைவுகள் தாக்கல் செய்யப்படவுள்ளதையும் உறுதிப்படுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular