
மாநில சட்டமன்றத்தில் உங்களுக்காக குரல் கொடுக்க எனக்கு வாய்ப்பு தாருங்கள்’ என எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் நீலாய் தொகுதியின் பெர்சாத்து கட்சியின் வேட்பாளர் டத்தோ சரவண குமார் கோரிக்கை விடுத்தார்.
நீலாய் வட்டார மக்களுக்கு தாம் புது முகமல்ல. கோலாலம்பூரை சேர்ந்த தாம் 1998 ஆம் ஆண்டில் சுபாவிலிருந்து செப்பாங்கிற்கு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் மாற்றப்பட்டது முதல் இங்கு வசித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 28 ஆண்டு காலமாக டிஎஸ்கே என்ற அரசு சாரா இயக்கத்தின் வழி இந்த வட்டாரத்தில் உள்ள மக்களுக்கு பல சேவைகளை தாம் வழங்கி வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக கோவிட் 19 தொற்றுக்காலத்தில் இங்குள்ள சுமார் 3,000 பேருக்கு கோவிட் தடுப்பூசி தனியார் நிறுவனத்தின் மூலம் இலவசமாக தாங்கள் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இது மட்டுமின்றி இந்த வட்டார மக்களுக்கு கல்வி, போக்குவரத்து உட்பட பல சலுகைகளை தாங்கள் வழங்கி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த வட்டாரத்தில் நன்கு அறிமுகமான தாம், இன்னும் அதிகமான சேவைகளை செய்யவே இந்த தேர்தலில் தாம் போட்டியிட முடிவு செய்துள்ளதாக நெகிரி செம்பிலான் மாநில பெர்சாத்து கட்சியின் பெர்செக்குத்து பிரிவின் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தான் தேர்வு செய்யப்பட்டால் இங்குள்ள மக்களுக்கு இன்னும் அதிகமான சேவைகளை ஆற்ற முடியும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த தொகுதியில் போட்டியிட தமக்கு வாய்ப்பு வழங்கிய பெர்சாத்து கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ முஹிடின் யாசினுக்கு தாம் இவ்வேளையில் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இந்த தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் பெர்சாத்து கட்சியின் சார்பில் போட்டியிட 5 இந்தியர்களுக்கு டான்ஸ்ரீ முஹிடின் வாய்ப்பு வழங்கியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்றார் அவர்.


