
எதிர் வரும் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் ஜெயராம் பாடாங் தொகுதியில் தாம் வெற்றி பெற்றால், இந்த தொகுதியில் பெரும் மாற்றத்தை கொண்டு வரப் போவதாக பெர்சாத்து கட்சியின் உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சஞ்சீவன் ராமகிருஷ்ணன் கூறினார்.
‘இந்த ஜெராம் பாடாங் தொகுதி எனது மனதுக்கு நெருக்கமான ஒன்றாகும். ஆகையால் தான் இந்த தொகுதியில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன்’என்றார் அவர்.
‘அரசியலுக்கு நான் புதியவன் அல்ல. நீண்ட காலமாக அரசியலில் இருந்து வருகிறேன்’ என அவர் குறிப்பிட்டார்.
இந்த தொகுதியில் உள்ள மக்களை நீண்ட காலமாக தாம் சந்தித்து அவர்களின் குறைகளை கண்டறிந்து அவ்வப்போது உதவி வருவதாக அவர் தெரிவித்தார்.
மேலும் நீண்ட காலமாக ஒரு அரசு சாரா இயக்கத்தில் இருந்து வந்துள்ளதால், மக்கள் எதிர் நோக்கம் பிரசனைகள் என்ன என்பதை தெரிந்து வைத்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இன்னும் சில நாட்களில் ஜெராம் பாடாங் சட்டமன்ற தொகுதிக்கான கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கையை தாம் வெளியிட இருப்பதாக அவர் தெரிவித்தார்.
இந்த தொகுதியில் அடிப்படை வசதிகள், சமூக நலன் மற்றும் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் இந்த கொள்கை அறிக்கையில் இடம் பெறும் என அவர் சுட்டி காட்டினார்.
‘இங்குள்ள மக்களுக்கு என்னை நன்றாக தெரியும். இங்குள்ள மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் மற்றும் இதர சமூகத்தினருடன் நான் நெருங்கி பழகி வருகிறேன். என்னை தங்களின் குடும்ப உறுப்பினராக என்னை இவர்கள் கருதி வருகின்றனர்’ என்றார் அவர்.
ஆகையால் ஆகஸ்டு 1 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் இங்குள்ள அனைத்து சமூகத்தினரும் தம்மை வெற்றியடைய செய்வர் என தாம் நம்புவதாக டத்தோஸ்ரீ சஞ்சீவன் நம்பிக்கை தெரிவித்தார்.


