
இந்திய இளைஞர்கள் பொது சேவைத் துறையில் அதிகளவில் இணைவதற்கு முன்வர வேண்டும் என்று தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் வலியுறுத்தினார்.
இன்று சிகாமாட், ஜெமெந்தா பல்நோக்கு மண்டபத்தில் நடைபெற்ற“Program Jalinan Mesra Bersama Masyarakat Segamat, Johor நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் பொது சேவைத் துறையில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் மேலும் அதிகரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறினார்.
2024-ஆம் ஆண்டின் நிலவரப்படி, பொது சேவைத் துறையில் இந்தியர்கள் 3.7 விழுக்காட்டினர் மட்டுமே உள்ளதாகவும், இது சுமார் 48,190 பேரை உள்ளடக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டுக்கான மலேசிய பொதுச் சேவை ஆணையத்தின் (SPA) அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, பொது சேவைத் துறையில் இணைய 38,005 இந்தியர்கள் விண்ணப்பித்த நிலையில், 4,516 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களில் 3,672 பேர் நேர்முகத் தேர்வில் பங்கேற்றதுடன், 991 பேர் மட்டுமே நியமனம் பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்ட சிலர் அதில் பங்கேற்காததும், பொது சேவைத் துறையில் இந்தியர்களின் வாய்ப்புகளை பாதிக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பொது சேவைத் துறையில் இணைய விரும்பும் இளைஞர்களுக்கு விண்ணப்ப நடைமுறைகள், தகுதிகள், தேர்வுகளுக்குத் தயாராகும் முறைகள் மற்றும் நேர்முகத் தேர்வில் வெற்றிபெறும் வழிமுறைகள் குறித்து நேரடி வழிகாட்டுதல்களை வழங்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
மேலும், பட்டதாரிகள், எஸ்.பி.எம். மற்றும் எஸ்.டி.பி.எம். முடித்த இளைஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி பயனுள்ளதாக அமைந்துள்ளதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
புத்ராஜெயா இந்திய அரசு ஊழியர்கள் சங்கம், இமையம் மற்றும் யுனேஸ்வரன் ராமராஜ் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில், மலேசிய பொதுச் சேவை ஆணையத்தின் ஆணையர் எஸ். லெட்சுமணன் சண்முகம் மற்றும் சுகாதார அமைச்சின் துணைச் சுகாதாரப் பணிகள் பிரிவின் உதவி இயக்குநர் சரவணக்குமார் மணியம் ஆகியோர் சிறப்பு பேச்சாளர்களாகக் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு வழிகாட்டினர்.
இந்நிகழ்ச்சியில் நாடி (NADI), மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, சுகாதார அமைச்சு, மலேசிய பொதுச் சேவை ஆணையம் (SPA) உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் தகவல் கூடங்களும் இடம்பெற்றன.
பொது சேவைத் துறையில் இணைய ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு தேவையான தகவல்கள், வாய்ப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களை ஒரே இடத்தில் வழங்கும் தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது.


