
தேசிய உயர்கல்வி நிதி வாரியம் (PTPTN) கடன்பெற்றோரிடம் கடன் வசூல் முகவர்களால் விதிக்கப்படும் 15% கட்டணத்தை அரசாங்கம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இக்கட்டணம், கல்விக்கான கடனைத் திருப்பிச் செலுத்த ஏற்கனவே நிதி நெருக்கடியில் தவித்து வரும் மக்களின் நிதிச் சுமையை மேலும் கூட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மலேசிய நிதி கட்சியின் (KEADILAN) மகளிர் பிரிவு மத்திய துணைப் பொருளாளர் கேரன் கஸ்தூரி கூறுகையில், தங்களுக்குப் பொதுமக்களிடமிருந்து, குறிப்பாக இளைஞர்களிடமிருந்து பல்வேறு கருத்துகள் வந்துள்ளதாகத் தெரிவித்தார். அவர்கள் பி.டி.பி.டி.என் (PTPTN) கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த மறுக்கவில்லை என்றும், மாறாகப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதோடு, தற்போதைய கடன் வசூல் முறை தங்களின் சுமையை மேலும் அதிகரிப்பதாகக் கருதுகின்றனர் என்றும் அவர் கூறினார்.
எனவே, கடன் வாங்கியவர்கள் கடன் வசூல் செய்யும் நிறுவனங்கள் (syarikat pemungut hutang) மூலம் செல்லாமல், நேரடியாக PTPTN உடன் பேச்சுவார்த்தை நடத்தவும் மற்றும் கட்டணத்தை மறுசீரமைப்பு (penstrukturan semula) செய்யவும் அனுமதிப்பது உள்ளிட்ட விவகாரங்களை அரசாங்கமும் உயர் கல்வி அமைச்சும் (KPT) உடனடியாக பரிசீலிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
“மேலும், கடன் வாங்குபவர்கள் எளிதில் அணுகக்கூடிய, அதிகாரப்பூர்வ மற்றும் வெளிப்படையான வழிமுறையை வழங்கும் பி.டி.பி.டி.என் (PTPTN) மறுஆலோனை மையத்தை (ஒருங்கிணைந்த சேவை மையம் – one-stop centre) நிறுவுவதற்கும்; அதிக நெகிழ்வுத்தன்மை கொண்ட மறுசீரமைப்புத் தேர்வுகள் மற்றும் B40, M40 பிரிவைச் சேர்ந்த கடன் வாங்குபவர்களுக்கு இலக்கு வைக்கப்பட்ட உதவிகளை வழங்குவதன் மூலம் உடனடி மறுசெலுத்துகை முறையை மறுமதிப்பீடு செய்வதற்கும் முன்மொழியப்பட்டுள்ளது.”
“மேலும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஈபிஎஃப் (KWSP) சேமிப்பைப் பயன்படுத்துவது நியாயமற்ற இடைத்தரகர் கட்டணங்களால் அழிந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.”
“PTPTN கடன் வாங்கியவர்கள் வெறும் கடனாளிகளாக மட்டும் பார்க்கப்படக் கூடாது, மாறாக அவர்கள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்று, இப்போது தங்களது நிதி நிலைத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிக்கும் மலேசியர்களாகப் பார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
“பிடிபிடிஎன் (PTPTN) சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அரசாங்கம் உண்மையிலேயே உறுதியாக இருந்தால், அந்த முயற்சி தற்போது கடன் பெற்றவர்களின் குரல்களுக்குச் செவிசாய்ப்பதுடன், தற்போது அமலில் உள்ள திருப்பிச் செலுத்தும் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைவதிலிருந்தும் தொடங்க வேண்டும் என்று கேரன் கூறினார்.”
“எதிர்காலத்தில் பிடிபிடிஎன் (PTPTN) கொள்கையில் ஏற்படும் எந்தவொரு மாற்றமும் மிகவும் நியாயமான, வெளிப்படையான, நிலையான மற்றும் மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்கும் தீர்வை உருவாக்குவதை உறுதிசெய்ய, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் மற்றும் உயர்கல்வி அமைச்சு (KPT) இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்.”
“அதே வேளையில், பி.டி.பி.டி.என் (PTPTN) இன் எதிர்காலம் குறித்த முன்மொழிவுகளை அரசாங்கம் விவாதிக்கும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அன்வார் கூறிய அறிக்கையை நான் வரவேற்கிறேன். “இருப்பினும், பி.டி.பி.டி.என்-ஐ ரத்து செய்வது அல்லது மறுசீரமைப்பு செய்வது போன்ற சாத்தியக்கூறுகளை அரசாங்கம் பரிசீலித்து வரும் வேளையில், தற்போது தங்களது திருப்பிச் செலுத்தும் கடமைகளை நிறைவேற்றுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான தற்போதைய கடன்பெற்றவர்களுக்கும் உடனடி கவனம் செலுத்தப்பட வேண்டும்,” என்று கெஅடிலான் (KEADILAN) மகளிர் மத்திய தலைமைத்துவக் குழுவின் செயற்குழு உறுப்பினருமான கேரன் கூறினார்.


