Monday, July 6, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

ஜொகூரின் வடப் பகுதிகளின் வளர்ச்சிக்கான நேரம் வந்துவிட்டது – யுனேஸ்வரன்!

ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சி தெற்குப் பகுதிகளில் மட்டுமல்லாமல், வட பகுதிக்கும் சமமான வளர்ச்சி வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டிய காலம் வந்துவிட்டதாக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்துள்ளார்.

ஜொகூர் பாரு மற்றும் தெற்கு ஜொகூர் அம்மாநிலத்தின் முக்கியப் பொருளாதார மையங்களாக விளங்கினாலும், சிகாமாட், தங்காக், மூவார் உள்ளிட்ட வடப் பகுதிகளைத் தொடர்ந்து புறக்கணிக்கக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

ஜொகூரிம் வடப் பகுதியில் வாழும் மக்களும் வரி செலுத்தி நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களித்து வருவதாகவும், அவர்களுக்கும் சமநிலையான வளர்ச்சி, தரமான உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் கிடைக்க வேண்டியது அவர்களின் உரிமை என்றும் அவர் கூறினார்.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை உயரமான கட்டடங்கள், ஆடம்பர வணிக வளாகங்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி மூலம் மட்டும் அளவிட முடியாது என்றும், ஒவ்வொரு மாவட்ட மக்களும் வேலைவாய்ப்பு, முதலீடு, நவீன போக்குவரத்து, தரமான உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளைப் பெறுவதே உண்மையான வளர்ச்சி என்றும் அவர் தெரிவித்தார்.

வேலைவாய்ப்புகள் குறைவாக இருப்பதால் வடப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஜொகூர் பாரு, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூருக்கு இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்முனைவோர் அதிகப் போக்குவரத்து செலவால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், சிகாமாட் உள்நாட்டு துறைமுகத்தை (Segamat Inland Port – SIP) மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவர போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மற்றும் போக்குவரத்து அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கையை அவர் வரவேற்றார்.

சிகாமாட் உள்நாட்டு துறைமுகம் ஒரு தளவாட மையமாக மட்டும் இல்லாமல், ஜொகூரின் வடப் பகுதியின் பொருளாதார எழுச்சிக்கான தொடக்கமாக அமையும் என்றும், சாலை–ரயில் ஒருங்கிணைந்த போக்குவரத்து முறை (Road-to-Rail) நடைமுறைக்கு வந்தால் தளவாடச் செலவு குறைவதோடு, பொருட்கள் விரைவாகக் கொண்டு செல்லப்படும் என்பதால், மேலும் பல நிறுவனங்கள் வடக்கில் முதலீடு செய்ய முன்வரும் என்றும் அவர் கூறினார்.

எனினும், சிகாமாட் உள்நாட்டு துறைமுகம் மட்டுமே போதுமானதல்ல என்றும், வடக்கு ஜொகூரின் முழுமையான வளர்ச்சிக்காக பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அதன்படி, சிகாமாட் உள்நாட்டு துறைமுகத்தை முழுமையாக செயல்படுத்துதல், வெள்ளத் தடுப்புத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்தல், ஜொகூர் பாரு வரை திறன்மிக்க ETS ரயில் சேவையை விரிவுபடுத்துதல், தங்காக்–சிகாமாட் உள்ளிட்ட முக்கிய சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்துதல், புதிய தொழிற்பேட்டைகளை உருவாக்குதல், இளைஞர்கள் மற்றும் நடுத்தர வருமானக் குடும்பங்களுக்கான மலிவு விலை வீடுகளை அதிகரித்தல், நவீன வேளாண்மை, உணவுப் பதப்படுத்தல் மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்களில் முதலீட்டை விரிவுபடுத்துதல், சிகாமாட்டின் வேளாண்மைத் துறைக்கு கூடுதல் மதிப்பூட்டல் மற்றும் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துதல், மேலும் கிழக்குக் கடற்கரை பொருளாதாரப் பிராந்திய (ECER) வளர்ச்சித் திட்டத்தில் சிகாமாட்டிற்கு சிறப்பு கவனம் வழங்குதல் ஆகியவை முன்னுரிமை பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜொகூரின் வடப் பகுதியை மலேசியாவின் புதிய பொருளாதார வளர்ச்சி வழித்தடமாக உருவாக்கும் அனைத்துத் தகுதிகளும் இருப்பதாகவும், வளமான நிலப்பரப்பு, வலுவான வேளாண்மைத் துறை, மூலோபாய புவியியல் அமைவு, திறமையான மனிதவளம் மற்றும் தளவாடத் திறன் ஆகியவை வடக்கு ஜொகூரின் பலங்களாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

வளர்ச்சியைச் சமமாகப் பகிர்ந்தளிக்கும் அரசியல் மனப்பாங்கே தற்போது மிகவும் அவசியமாக இருப்பதாகவும், தெற்கு ஜொகூர் சர்வதேச நுழைவாயிலாக இருந்தால், வடக்கு ஜொகூர் வேளாண்மை, உற்பத்தி, தளவாடம் மற்றும் வர்த்தகத்தை இணைக்கும் புதிய வளர்ச்சி நுழைவாயிலாக மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினராக, ஜொகூரின் வடப் பகுதி மக்களின் குரலை நாடாளுமன்றம், சம்பந்தப்பட்ட அமைச்சுகள் மற்றும் ஜொகூர் மாநில அரசிடம் தொடர்ந்து கொண்டு சேர்ப்பேன் என்றும், இஃது அரசியல் பிரச்சனை அல்ல; சமமான வளர்ச்சிக்கான போராட்டம் என்றும் என்றும் யுனேஸ்வரன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular