Friday, June 19, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

சிகாமாட் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுடன் சந்திப்பு: கல்வி முன்னேற்றத்திற்கு யுனேஸ்வரன் உறுதி!

சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட தமிழ்ப்பள்ளி ஆசியர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், கல்வித் துறையைத் தொடர்ந்து வலுப்படுத்துவதற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் யுனேஸ்வரன் ராமராஜ் தெரிவித்தார்.

ஜொகூர் மாநிலம் சிகாமாட்டில் அமைந்துள்ள VIP ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிகாமாட் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்து தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

நீண்ட காலமாக ஏற்பாடு செய்ய விரும்பிய நிகழ்ச்சியா இஃது அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட யுனேஸ்வரன், தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் பள்ளிகள் எதிர்கொள்ளும் சவால்களையும் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இந்த நிகழ்ச்சி அமைந்ததாக கூறினார்.

பிரதமர் அலுவலகத்திலிருந்து கிடைத்துள்ள தற்போதைய பொருளாதார நிலவரங்கள் மற்றும் மடானி அரசாங்கத்தின் கல்வித் துறைக்கான அர்ப்பணிப்பு தொடர்பான தகவல்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

கல்வி துறை அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகத் தொடர்வதாகவும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கல்வி மற்றும் அறிவு சார்ந்த நோக்கத்துடன் அது ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

1971ஆம் ஆண்டு யாயாசான் ஆண்டா அகாடெமிக் அமைப்பை நிறுவி, பொருளாதார ரீதியாக பின்தங்கிய மற்றும் கல்வியை இடைநிறுத்திய இளைஞர்களுக்கு மீண்டும் கல்வி வாய்ப்பை வழங்க பிரதமர் முனைந்திருந்ததை அவர் நினைவுகூர்ந்தார்.

மேலும், இந்நிகழ்ச்சியில், சிகாமாட் மாவட்டக் காவல்துறையின் குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரி இன்ஸ்பெக்டர் தனசேகரன் செல்லையா பள்ளிகளில் இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பாக விளக்கமளித்ததுடன், புலோ காசாப் தேசிய இடைநிலைப் பள்ளியின் ஆலோசகர் ஆசிரியர் நூருல் ஜலிலா அப்துல் ரஹ்மான் ஆசிரியர்களிடையேயான மனஅழுத்தத்தை கையாள்வது குறித்த விளக்கத்தையும் வழங்கினார்.

சிகாமாட் மாவட்டத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் மன்றத் தலைவர் பிரேமா ராமகிருஷ்ணனும் கலந்து கொண்டு, மாவட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் சாதனைகள் குறித்து விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில், பத்து ஆனாம் தமிழ்ப்பள்ளி, சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி, கோமாலி தோட்டத் தமிழ்ப்பள்ளி, போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆகிய பள்ளிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து கல்வியாளர்களுக்கும், நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த சிகாமாட் நாடாளுமன்ற அலுவலக ஊழியர்களுக்கும் யுனேஸ்வரன் நன்றி தெரிவித்தார்.

ஆசிரியர்கள் பாடம் கற்பிப்பவர்களாக மட்டும் இல்லாமல், மாணவர்களின் பண்புகள், ஒழுக்கம், தன்னம்பிக்கை மற்றும் எதிர்காலத்தை உருவாக்கும் முக்கிய ஆளுமைகளாக இருப்பதாகவும், அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கான முதுகெலும்பாகத் திகழ்வதாகவும் அவர் கூறினார்.

எதிர்காலத்தில் சீனப் பள்ளிகள் மற்றும் தேசியப் பள்ளிகளின் கல்வியாளர்களுடனும் இதுபோன்ற சந்திப்புகளை நடத்த விருப்பம் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular