
எந்தவொரு நடவடிக்கைக்கும் முன், ஆவணமற்ற இந்து கோவில்கள் தொடர்பான நீண்டகால பிரச்சினையை அரசு முதலில் தீர்க்க வேண்டும் என்று மக்கள் முற்போக்கு கட்சி (பிபிபி) தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த கோவில்களை “சட்டவிரோதம்” என்று கூறுவதற்கு முன், அவற்றின் வரலாற்றுப் பின்னணியை புரிந்து கொள்ள வேண்டும் என்றும், பல கோவில்கள் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டு, இந்திய சமூகத்திற்கு பெரும் பண்பாட்டு மற்றும் சமூக முக்கியத்துவம் கொண்டவை என்றும் அவர் கூறினார்.
“சமீப காலங்களில் சட்டத்தை மீறி கட்டப்பட்ட கோவில்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் பல தசாப்தங்களுக்கு முன்பு உருவான பழைய கோவில்களை இடிப்பது மிகுந்த அநியாயமாகும்,” என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
1840-களிலிருந்தே பிரித்தானியர்களால் இந்தியர்கள் மலாயாவிற்கு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் கங்காணி முறையின் மூலம் அவர்கள் தோட்டத் தொழிலாளர்களின் பெரும்பான்மையினராக மாறியதாகவும் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் கூறினார்.
“ஒருகாலத்தில் நாட்டில் சுமார் 3,000 தோட்டங்கள் இருந்தன. இந்திய தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள், தமிழ்ப் பள்ளிகள் மற்றும் கோவில்கள் வழங்கப்பட்டன.
ஆனால் இவை நில உரிமை அடிப்படையில் முறையாக பதிவு செய்யப்படவில்லை,” என்றார்.
1970-களுக்குப் பிறகு தொழில்துறை பொருளாதாரத்திற்கு மாறியபோது, பல இந்திய தோட்டத் தொழிலாளர்கள் வேலை இழந்து இடம்பெயர்க்கப்பட்டதாகவும், இதுவே இன்றும் தொடரும் பல சமூக பிரச்சினைகளுக்குக் குறிப்பாக ஆவணங்களற்ற கோயில்கள் இருப்பதற்கு காரணம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“இந்த கோவில்கள் வரலாற்றிலும் உணர்ச்சியிலும் சட்டவிரோதமானவை அல்ல. அவை காலனித்துவ கால குடியேற்ற முறைமைகளின் விளைவுகளும், பல தசாப்தங்களாக அரசின் அலட்சியத்தின் விளைவுகளுமாகும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள் நேரடியாக தலையிட்டு, வழிபாட்டு தலங்களை பாதுகாக்கும், நில உரிமையை ஒழுங்குபடுத்தும் தேசிய கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
“இது அரசியல் கோரிக்கை அல்ல. மலேசியாவின் ஆரம்பகால பொருளாதார வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருந்த இந்து சமூகத்தினருக்கு அரசின் வரலாற்றுப் பொறுப்பும், நெறிப்பண்புக் கடமையும் ஆகும்,” என்று டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் தெரிவித்தார்.


