Thursday, March 12, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

‘கோயில் ஹராம்’ எதிர்ப்பு பேரணியை புறக்கணியுங்கள்!-பாஸ்,பெர்சாத்து கட்சிகளுக்கு எம்ஐபிபி வலியுறுத்து!

நாட்டில் சில பொறுப்பற்ற தரப்பினர் நடத்தத் திட்டமிட்டு இருக்கும் ‘கோயில் ஹராம்’ எதிர்ப்புப் பேரணியை புறக்கணிக்கும் படி பெரிக்காத்தான் நேஷனல் எதிர்க்கட்சி கூட்டணியின் மலேசிய இந்திய மக்கள் கட்சி(எம்ஐபிபி) தனது பங்காளி கட்சிகளான பாஸ் மற்றும் பெர்சாத்து கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தது.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் நிலைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு அதிகாரப்பூர்வ கடிதத்தின் வழி பாஸ் தலைவர் ஹாடி அவாங் மற்றும் பெர்சாத்து தலைவர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டு விட்டதாக எம்ஐபிபி தகவல் பிரிவு தலைவர் ஜஸ்டின் பிரபாகரன் கூறினார்.
தங்களின் கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வதை தடுத்து நிறுத்தும்படி இந்த தலைவர்களுக்கு எம்ஐபிபி கட்சியின் தேசிய தலைவர் புனிதன் கையெழுத்திட்ட கடிதத்தில் வலியுறுத்தப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார்.
தேசிய நல்லிணக்கம், அமைதி மற்றும் பாதுகாப்பை நிலை நிறுத்தவும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் நிலைத்தன்மையை பேணவும் இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தலைநகரில் இந்த பேரணி நடத்தப்படுவதை தடுத்து நிறுத்துமாறு தேசிய போலீஸ் படை தலைவர் காலிட் இஸ்மாயிலுக்கும் எம்ஐபிபி கடிதம் எழுதியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த எதிர்ப்பு பேரணியை நடத்த 140 அரசு சார்பற்ற அமைப்புகளைச் சேர்ந்த இயக்கமொன்று திட்டமிட்டுள்ளது.
எதிர் வரும் சனிக்கிழமை தலைநகர் சோகோ பேரங்காடி முன்புறம் இந்த எதிர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
இதனிடையே இனப் பிரச்சினையை தூண்டும் வகையிலான இந்த பேரணி நடத்த போலிஸ் அனுமதிக்க கூடாது என பிரபாகரன் தெரிவித்தார்.
தேசிய அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் இது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் நினைவுறுத்தினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular