
எதிர் வரும் சீன புத்தாண்டு மற்றும் ஹாரி ராயா கொண்டாட்டங்களை முன்னிட்டு சபா மற்றும் சரவாக் மாநிலங்களுக்கு உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா விழா கால கட்டணங்களை வழங்குகிறது.
கோலாலம்பூர்-சரவாக்கிற்கு வெ328 மற்றும் கோலாலம்பூர்-சபாவிற்கு வெ398 சிறப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் அறிவித்தார்.
இன்று இங்குள்ள ஏர் ஆசியா தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இந்த அறிவிப்பை செய்தார்.
இந்த முயற்சியின் கீழ் கோலாலம்பூரிலிருந்து சரவாக்கில் உள்ள கூச்சிங்,மீரி,சீபு மற்றும் பிந்துலு நபர்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழி பயண கட்டணம் வெ328.அதே போல் கோலாலம்பூரிலிருந்து சபாவில் கோத்தா கினபாலு, தாவாவ் மற்றும் சாண்டகான் நகர்களுக்கு அனைத்தும் அடங்கிய ஒரு வழிப் பயண கட்டணம் வெ398 என்றார் அவர்.
இதனிடையே FLYsiswa விமான மானிய திட்டத்தை அரசாங்கம் அடுத்த வாரம் தொடங்கவிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் அரசாங்க கல்வி நிலையங்களை சேர்ந்த மாணவர்களுக்கு வெ400 விமான பற்றுச்சீட்டு வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டு மற்றும் ஹாரி ராயா காலங்களில் கோலாலம்பூரிலிந்து கிழக்கு மலேசியா நகரங்களுக்கு இந்த விமான மானிய திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து வழங்கி வரும் என அவர் தெரிவித்தார்.

27,000 விமான டிக்கெட்களுக்கு போக்குவரத்து அமைச்சு வெ11 மில்லியன் செலவிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே சீன புத்தாண்டு மற்றும் ஹாரி ராயா விழா காலங்களுக்கு 1,578 விமானங்கள் செயல்படும் என ஏர் ஆசியா மலேசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ கேப்டன் ஃபாரே மாஸ்புத்ரா கூறினார்.
இந்த காலகட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களுக்கு 31,000 இருக்கைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சீன புத்தாண்டு காலத்திற்கான டிக்கெட்டுகளை இப்பொழுது முதல் பிப் 24 ஆம் தேதி வரை கொள்முதல் செய்து கொள்ளலாம். இதற்கான பயண காலம் பிப் 13 ஆம் தேதி முதல் பிப் 24 வரையாகும்.
ஹாரி ராயா விழா காலத்திற்கான டிக்கெட்டுகள் இப்பொழுது முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இதற்கான பயண காலம் மார்ச் 18 ஆம் தேதி முதல் மார்ச் 26 தேதி வரை ஆகும்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துணையமைச்சர் டத்தோ ஹஸ்பி ஹாபிபொல்லா மற்றும் ஏர் ஆசியா அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ ஜானா சந்திரன் முனியனும் கலந்து கொண்டார்.


