
கிழக்கு மலேசியாவை ஒரு விமான மையமாக உருவாக்கும் வகையில், கோத்தா கினபாலுவிலிருந்து 2 புதிய நேரடி விமான சேவைகளை பாத்தேக் ஏர் தொடங்குகிறது.
போர்னியோ மண்ணில் தடையற்ற விமான சேவையை வழங்கும் வகையில் கோத்தா கினபாலு-கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு-சாண்டகான் நகர்களுக்கான நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கியது.
இந்த புதிய நேரடி விமான சேவை நீண்டு தூர தரைமார்க்க பயணத்திற்கு பதிலாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
சபா மற்றும் சரவாக் மாநிலங்களை எளிதில் இணைக்க இந்த இரு நேரடி விமான சேவைகள் அமைந்துள்ளது.
கூச்சிங்கிலிருந்து கோத்தா கினபாலு அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த பயணிகளை சபா சுற்றுலாத்துறை வாரிய அதிகாரிகள் பாரம்பரிய மாலையிட்டு உற்சாகமாக வரவேற்றனர்.
இதனிடையே இந்த 2 புதிய நேரடி விமான சேவைகளின் மூலம் கிழக்கு மலேசியாவை ஒரு முக்கிய விமான மையமாக முன்னெடுக்க நடவடிக்கை என பாத்தேக் ஏர் விமான நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி டத்தோ சந்திரன் ராம மூர்த்தி கூறினார்.
இந்த புதிய வழித்தடம் சபா மற்றும் சரவாக் மாநில மக்களின் பயண சுமையை குறைக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இது மட்டுமின்றி கோத்தா கினபாலு மற்றும் சிங்கப்பூருக்கு இடையே நேரடி விமான சேவையை பாத்தேக் ஏர் தொடங்கவிருக்கிறது.அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்றார் அவர்.
2026 மலேசியாவிற்கு வருகை புரியும் ஆண்டின் பிரச்சாரத்திற்கு இந்த நேரடி விமான சேவைகள் துணை புரியும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே இந்த புதிய நேரடி விமான சேவைகள் இரு மாநிலங்களுக்கு இடையிலான பயண தேவைகளை நிறைவு செய்யும் என சபா சுற்றுலா வாரியத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ஜூலினஸ் ஜெப்ரி ஜிமிட் கூறினார்.
மேலும் சாண்டகானுக்கான நேரடி விமான சேவை சபா வனவிலங்கு மற்றும் இயற்கை அழகை கண்டு ரசிப்பதற்கான ஒரு நுழைவாயில் என அவர் சுட்டிக் காட்டினார்.
போர்னியோ மண்ணை சேர்ந்த மக்கள் இந்த புதிய விமான சேவைகளின் மூலம் அதிக பயணடைய முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கடந்த 15 டிசம்பர் 2025 முதல் கோத்தா கினபாலு-கூச்சிங் மற்றும் கோத்தா கினபாலு-சாண்டகான் வாரத்திற்கு 7 விமான சேவைகளை பாத்தேக் ஏர் தொடங்கியுள்ளது.


