
கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமித்து தமக்கு ‘பெரிய பொறுப்பை’ வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிக்கு தாம் நன்றி கூறுவதாக முன்னாள் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார்.
அடிப்படை அரசாங்க சேவைகளை மேம்படுத்துதல், நிலையான மேம்பாட்டை ஊக்குவித்தல் மற்றும் திடீர் வெள்ளத்தை கையாளுதல் என்பதில் தாம் முழுமையான கவனத்தை செலுத்தப் போவதாக அவர் குறிப்பிட்டார்.
அனைத்து கொள்கைகள் அமைத்தல் நடைமுறைகளில் மக்களின் குரல் செவி மடுக்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் சம்பந்தப்பட்ட தரப்பினரின் அனைத்து கருத்துகளும் செவிமடுக்கப்படும் என்றார் அவர்.
‘எனக்கு வழங்கப்பட்ட இந்த நம்பிக்கை மிக முக்கியமான பொறுப்பாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப நான் எனது கடமையை செய்வேன்’ என சிகாம்புட் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சின் ஊழியர்கள் வழங்கிய அர்ப்பணிப்பு மற்றும் நிபுணத்துவத்திற்கு தாம் நன்றி கூறுவதாக அவர் தெரிவித்தார்.
இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக பணியில் இருந்த போது விளையாட்டாளர்களின் சமூக நலன் மற்றும் அடிப்படை விளையாட்டு மேம்பாடு போன்றவற்றில் தாம் அதிக கவனம் செலுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே கூட்டரசு பிரதேச அமைச்சராக ஹன்னா இயோவின் நியமனம் கவனமாக கையாளப்பட வேண்டும் என அம்னோ தலைமைச் செயலாளர் அஸிராப் வாஸ்டி டுசுக்கி அறிக்கை ஒன்றில் கூறினார்.


