Saturday, April 18, 2026
spot_imgspot_imgspot_imgspot_img

இளைஞர்களை இணையத்தில் பாதுகாக்க அரசாங்கத்தின் திட்டத்தை பிபிபி கட்சி வரவேற்கிறது!

16 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் சமூக ஊடக தளங்களுக்கு அணுகுவதை தடை செய்வதாக அரசாங்கத்தின் அறிவிப்பை மக்கள் முற்போக்கு கட்சி(பிபிபி) வரவேற்பதாக அக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை ஒரு துணிச்சலான முடிவு என அவர் பாராட்டினார்.
நேற்று இங்கு கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.
‘இன்றைய டிஜிட்டல் காலத்தில் சமூக ஊடகம் இளைஞர்களின் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத பகுதியாக மாறியுள்ள நிலையில், இந்த ஒழுங்கு விதி இளைஞர்களை இணைய தளத்திலிருந்து வரும் மிரட்டல், ஒழுங்கு கேடான உள்ளடக்கம், மோசடி மற்றும் இணைய மோசடி ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பது மிக முக்கியமானதாகும்’ என்றார் அவர்.
இந்த நடவடிக்கை இளம் மலேசியர்களின் நலன், கல்வி மற்றும் பாதுகாப்பிற்கான பிபிபி கட்சியின் நீண்டகால போராட்டம் என அவர் சுட்டிக் காட்டினார்.
இணையத்தின் இருண்ட பக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்கும் அரசாங்கத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தடை அமையும் என அவர் தெரிவித்தார்.
பெற்றோர்கள், கல்வியாளர்கள் மற்றும் தள பொறுப்பாளர்கள் அனைவரும் இணைந்து பாதுகாப்பான இணைய சூழலை உருவாக்குவது மிக அவசியம் என அவர் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் பங்கு மிக அவசியம் என அவர் ஆலோசனை கூறினார்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து எதிர் வரும் 1 ஜனவரி 2026 முதல் 16 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் சமூக வலைத்தள கணக்குகளை திறக்க முடியாது.
இந்த இளைஞர்கள் பெற்றோர்களின் பெயர்களில் சமூக வலைத்தள கணக்குகளை திறந்தால், பெற்றோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டார்.
16 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் கைத் தொலைபேசி வைத்திருக்க கூடாது என்பதை இந்த புதிய விதிமுறை வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் பெற்றோர் மற்றும் சமூகங்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு மிக அவசியம் என அவர் ஆலோசனை கூறினார்.
அதே வேளையில் சமூக ஊடக தளங்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் டிஜிட்டல் கட்டுப்பாட்டு அமைப்புகள் இந்த புதிய விதிகளை வெளிப்படை தன்மையாக அமல்படுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
அரசாங்கத்தின் இந்த நல்ல திட்டத்திற்கு பிபிபி கட்சி முழுமையான ஆதரவை வழங்கும் என டத்தோ டாக்டர் லோக பாலா கூறினார்.
இதனிடையே இன்றைய உச்ச மன்ற கூட்டத்தில் பேராக் மாநிலத்தைச் சேர்ந்த 360 பேர் பிபிபி கட்சியில் புதிய உறுப்பினர்களாக இணைந்தனர்.
இதற்கான நுழைவு பாரங்களை அதன் பொறுப்பாளர்கள் கட்சித் தலைவரிடம் வழங்கினார்.
பிபிபி கட்சி தொடர்ந்து வலிமையுடன் செயல்பட்டு இந்நாட்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்கி வரும் என டத்தோ டாக்டர் லோக பாலா தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular