
மலாக்கா டுரியான் துங்காளில் அண்மையில் போலீசாரின் அதிரடி நடவடிக்கை தொடர்ந்து 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து ஒரு சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்திற்கு இடையே இந்த சம்பவம் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு மக்களுக்கு விளக்கம் தர வேண்டும் என்றார் அவர்.
நேற்று கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு தாம் கடிதம் எழுதியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த கொடூர சம்பவம் குறித்து ஆடியோ பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருவதால், குறிப்பாக இந்நாட்டில் உள்ள இந்திய சமூகத்தினர் குழப்பத்தில் இருந்து வருவதாக அவர் சொன்னார்.
இந்த 3 இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு யார் தான் காரணம் என்பதை சிறப்பு விசாரணை குழு கண்டறிய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆகையால் இந்த விவகாரத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.


