
இந்நாட்டில் உள்ள பல இனங்களுக்கிடையே புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ள பல்கலைக்கழகம் சரியான அடித்தளம் என திரெங்கானு மாநில மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு பிரிவின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
இங்கு நமது மாணவர்கள் கல்வி அறிவு மட்டுமல்ல எப்படி சிந்திப்பது, எப்படி வாழ வேண்டும் என்று திட்டமிடுவது போன்ற முக்கிய விவரங்களை கற்றுக் கொள்வதாக அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மலேசியா திரெங்கானு பல்கலைக்கழகத்தின் பரதம் கலாச்சாரம் கிளப்பின் ‘புதுமுகம் அறிமுகம்: இன்று நேற்று நாளை’ கொண்டாட்டத்தை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
திருக்குறளின் 391 ஆவது குரளான “கற்க கசடற கற்றவை கற்றபின், நிற்க அதற்கு தக’ என்ற குரளுக்கு ஏற்ப மாணவர்கள் தங்களை தயார் செய்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

கல்வியறிவு மற்றும் நமக்கு போதாது. பகுத்தறிவும் மிக அவசியம் என அவர் குறிப்பிட்டார்.
இந்த கல்வியாண்டில் இப் பல்கலைக்கழகத்தில் 201 இந்திய மாணவர்கள் நுழைந்துள்ளது ஒரு மகிழ்ச்சியான செய்தி என அவர் சுட்டிக் காட்டினார்.
நமது இந்திய மாணவர்கள் இதர சமூகங்களுக்கு இணையாக அனைத்து துறையிலும் வெற்றி நடை போட வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி மிக மிக அவசியம். ஆகையால் பல்கலைக்கழக மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என அவர் ஆலோசனை கூறினார்.
இந்த நிகழ்ச்சியை வெற்றியடைய செய்த அனைத்து தரப்பினருக்கும் அவர் நன்றி கூறினார்.


